நல்லெண்ணெய் பயன்கள்
நல்லெண்ணெய் தென் இந்தியாவில் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சித்த மருத்துவத்தில் தைலங்களில் சேர்த்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது இதனால் தலைமுடி தைலங்கள் நெல்லெண்ணய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
புத்திநய னக்குளிரிச்சி பூரிப்பு மெய்ப்புளகஞ்
சத்துவங் காந்தி தனியிளமை – மெத்தவுண்டாங்
கண்ணேய் செவிநோய் கபால அழல் காசநோய்
புண்ணேய்போ மெண்ணெய்யாற் போற்று
குணம்
எள்ளின் நெய்யால் ( நல்லெண்ணெய் ) புத்திக்கு தெளிவு, விழியிற்க்கு குளிர்ச்சி, மனமகிழ்ச்சி, தேகபுஷ்டி, பலம், பொலிவு, வாலிபத்தன்மை ஆகிய இவைகள் உண்டாம்.
உடல் நலனுக்கு நல்லெண்ணெய்
எள்ளின் நெய் என்று அழைக்கப்படும் நல்லெண்ணெய் வாரம் ஒரு முறை உடலுக்கு உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை நன்றாக தேய்த்து 1/4 மணி நேரம் கழித்து சிகைக்காய் கொண்டு குளித்து வர தேகம் செழிப்பாக மாறும். தோலும் மிருதுவாகும், மேனி பளபளப்பாகும். தேகத்தில் உள்ள உடல் சூடு தணியும். நல்லெண்ணையை தினமும் 1/4 – 1/2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர தேகத்தை கொழுமைப்படுத்தும்.
தலைமுடி தைலம்
தலைமுடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் தைலங்கள் தயாரிக்க நல்லெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் தலைமுடி தைலங்களால் உடல் குளிச்சி பெரும். பொடுகு, முடி கொட்டுதல் போன்றவற்றை தடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
நல்லெண்ணெய் கறிவேப்பிலை சாதம்
கறிவேப்பிலை பொடியை சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். நல்ல தூக்கம் வரும். முடி வறட்சிக்கு உதவுகிறது. கறிவேப்பிலை பொடியை நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு சேர்த்து சாப்பிடலாம்.
கண்நோய்கள் நீங்க
நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் கண் வலி, கண்ணில் நீர் வடிதல் போன்ற கண் சம்பந்தமான நோய்கள் நீக்கும். மேலும் உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் மண்டை குத்தல் நீங்கும்.