மூலிகைகள்
வாழைப்பழத்தின் மருத்துவ பயன்கள்
நம் நாட்டில் விளையும் வாழைப்பழங்களில் பல இனங்கள் உண்டு. இதில் நிறங்களும், கணத்திலும், உருவத்திலும், குணத்திலும் வேறுபடுகின்றன. இதை வைத்தே நம் முன்னோர்கள் பல பெயர்களை சூட்டியுள்ளனர். இவற்றுள் மொந்தன் வாழை, இரசத்தாளி, செவ்வாழை, கருவாழை, வெள்வாழை முதலிய பழங்கள் நோயினர்க்கு ஆகுமெனச் சித்தர்கள் கூறி இருக்கின்றனர்.
சுத்த வருச்சுனஞ்செய் சோமநோ யென்பதுவும்
பித்தநோ யென்னப் பிறந்தவையு – மெத்த
வரம்பைக் கடந்த மதமூர்ச்சை யும்போ
மரம்பைக் கனிக்கென் றறி.
குணம்
வாழைப்பழத்தால் உடம்பை வெளுக்க செய்கின்ற சோகை, பித்த நோய்கள், அடிக்கடி மயக்கம் ஏற்படுதல் ஆகியவை குணமாகும்.
பயன்கள்
- நன்றாக கனிந்த வாழைப்பழத்தை இரவு உணவுக்கு பின்பு ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவது நல்லது. இதனால் மலம் நன்றாக வெளியேறும் மேலும் பித்த பிணிகள் நீங்கும்.
- வெப்பமான உடல் கொண்டவர்கள், வெப்பம் மிகுந்த பகுதிகளில் வேலை செய்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
- இது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்து, இரத்தசோகையை நீக்குகிறது.
- இரசத்தாளி : இந்த வகை வாழைக்கனி மிகுந்த ருசி கொண்டது. ஆனால் இது அக்கினி மந்தத்தை உண்டாக்கும்.
- கருவாழை : அதிக ருசி உடைய கருவாழைப் பழத்தால் பித்தம் தணியும்.
- செவ்வாழை : செவ்வாழைப்பழம் உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும், ஆண்மையை அதிகரிக்கும்.
- மொந்தன் வாழைப்பழம் : மொந்தன் பழத்தால் அக்னி மந்தம், உடல் வலி, வயிற்றுப்போக்கு, பித்தம் ஆகியவை நீங்கும்.
- பச்சை வாழைப்பழம் : தேகத்தின் உஷ்ணத்தையும், பித்தத்தையும், மலபந்தத்தையும் நீக்கும்.
- அடுக்கு வாழைப்பழம் : அக்கினிமந்தத்தை உண்டாக்கும், பித்த மிகுதியையும், மலம் தீயவதையும் வெளியாக்கும்.