மென்மையான பாதங்களை பெற இயற்கை வழிமுறைகள்
உடலையே தாங்கி நிற்கும் தூண்கள்தான் கால்கள். எனவே கால்களையும், பாதங்களையும் நாம் மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். அழகிய பாதங்கள் பெண்களுக்கு ஒரு அறிய விஷயமாக பார்க்கப்படுகிறது. பெண்களின் பாதங்களை மென்மைக்கு ஒப்பிடுவார்கள்.வள்ளுவரும் இதைப்பற்றி
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்
என்கிறார்.
பாத வெடிப்பு வெடிப்பு என்பது முதலில் சாதாரணமாக இருந்தாலும் பிறகு அதுவே பெரிய பிரச்னையாகிவிடுகிறது. வெடிப்பு பெரிதாக தோன்றி மிகுந்த வலியையும், அரிப்புகளையும் உண்டாக்கும்.
பாதவெடிப்பு என்பது நம் உடலில் ஏற்படும் உஷ்ணத்தாலும், கொழுப்பு சத்து, சுண்ணாம்பு சத்து குறைபாட்டாலும் ஏற்படுகிறது.
பாத வெடிப்பு குணமாக
அரசமரத்தின் அடிப்பகுதியில் கீறினால் பால் வரும். அப்பாலை வெடிப்புகளின் மீது தடவி வர விரைவில் வெடிப்புகள் குணமாகும்.
வெதுவெதுப்பான நீரில் சில நிமிடங்கள் கால்களை ஊறவைத்து பிறகு துடைத்துவிட்டு, நல்லெண்ணெய் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், பன்னீர் 1 ஸ்பூன் கலந்து தேய்த்துவர ஒரே வாரத்தில் பாதவெடிப்புகள் காணாமல் போகும்.
வேப்பிலை, மருதாணி இரண்டையும் ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் ஒரு மஞ்சள் சேர்த்து பால் விட்டு அரைத்து பூசிவர வெடிப்புகள் மறைந்து அழகான பாதங்களை பெறலாம்.
மாம்பிசினை நீரில் குழைத்து பித்த வெடிப்புகள் மீது தடவி வரத் தீரும்.
அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பாதங்களில் தடவி அரை மணிநேரம் ஊறவைத்து மிதமான வெந்நீரில் கழுவி வர பாதங்களில் ஏற்படும் வெடிப்பு, புண் போன்ற அனைத்தும் தீரும்.