மணத்தக்காளியின் மருத்துவ பயன்கள்
மணத்தக்காளி நமது நாட்டில் பயிராகும் செடி இனங்களில் ஒன்று. இதன் இலை, காய், பழம் என அனைத்தும் உபயோகமானவை. இதில் சிவப்பு கருப்பு என இருவகையுண்டு. இவ்விரண்டின் குணமும் செய்கையும் ஒன்றே. மிளகு தக்காளி என்றும் சொல்வதுண்டு.
காய்க்குக் கபந்தீருங் காரிகையே யவ்விலைக்கு
வாய்க்கிரந்தி வேக்காடு மாறுங்காண் – தீக்கு
ளுணக்கிடு வற்ற லுருபிணியோர்க் காகும்
மணத்தக்கா ளிக்குள்ள வாறு.
மணத்தக்காளி கீரை மருத்துவ பயன்கள்
மணத்தக்காளியை எவ்விதத்திலும் சாப்பிட்டுவர இரத்தக் கழிச்சல், சீதபேதி, கிராணி, ஆசனக்கடுப்பு, மார்பில் சேரும் சளி, இருமல் இளைப்பு முதலியன குணமாகும்.
மேலும் மணத்தக்காளி குழந்தை நோய்கள் பலவற்றைப் போக்குவதுடன் கணைசூடு, அஸ்திசுரம், இதனால் ஏற்படும் வறட்டு இருமல், குழந்தைகள் எலும்புந்தோலுமாக மெலிந்து இருப்பது முதலியவற்றையும் குணப்படுத்தும். இதனை நாட்டு மக்கள் மக்களைக் காக்கும் மணத்தக்காளி என்றும் சொல்வார்கள்.
மணத்தக்காளி வற்றல்
உலர்ந்த மணத்தக்காளிக் காயை உப்பிட்ட மோரில் இரண்டொருமுறை போட்டுப் பிசறி உலர்த்தி வற்றலாக வைத்துக்கொள்வதுண்டு, வேண்டும் போது இதில் கொஞ்சம் எடுத்து நெய்விட்டு வறுத்துப் புளியிட்ட காரக்குழம்பில் போட்டு அன்னத்துடன் சேர்த்து உண்பதுண்டு, இதனால் உட்சூடு, நீர்க்கடுப்பு, அரோசகம் முதலியவைகள் குணமாகும்.