மூலிகைகள்
நெல் பயனுள்ள சில தகவல்கள்
நெல் சாதாரணமாக இந்தியா, பர்மா போன்ற நாடுகளில் அதிகளவில் பயிராகின்றன. இதனைக் குத்தி உமி போக்கி எடுத்த அரிசியைப் பச்சரிசி என்றும், சிறிது வேகவைத்து உலர்த்தி குத்தி உமிபோக்கி எடுத்ததை புழுங்கலரிசி என்றும் கூறுவர். இந்தியாவில் பயிராகும் நெற்களிலிருந்து எடுக்கும்படியான அரிசியானது ஒரே இனமாக இருக்காது. நிறத்திலும், உருவத்திலும், கனத்திலும், குணத்திலும் பேதப்படும். இக்காரணத்தைக்கொண்டே பல பெயர்களிட்டிருக்கின்றன.
இத்தகைய அரிசிகளை பழக்க வழக்கத்திற்கு ஏற்றவாறு அந்தந்த நகரவாசிகள் அன்னமாகச் சமைத்தும், மாவாக்கித் தோசை, இட்லி, இடியாப்பம், போன்ற உணவுகளாக சமைத்து உண்கின்றனர்.
- பச்சரிசி சாதத்தினால் உடல் வலிமை உண்டாகும். சிறுநீர் எரிச்சலும், பித்தமும் போகும். இதனுடன் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இல்லையென்றால் உஷ்ணத்தையும்,வாயுவையும் அதிகப்படுத்தும்.
- புழுங்கலரிசி சாதம் குழந்தைகள், பெரியோர், முதியவர் என அனைவருக்கும் ஏற்றது. புழுங்கலரிசி சாதம் சாப்பிடுபவர்களை வாத நோய்கள் நெருங்காது.
- தினமும் அதிக சூடாக அன்னத்தை சாப்பிடுபவர்களுக்கு ரத்தக் கொதிப்பு, அடங்காத தாகம், நாவறட்சி உண்டாகும்.
- மிதமான சூடுள்ள சாதத்தினை உண்பதே சிறந்தது. இது வாத, பித்த, கப நோய்களையும், நா சுவை இன்மையையும் போக்குவதுடன் உடலுக்கு பலத்தையும் உண்டாக்கும்.
- பகல் பொழுதில் உண்ணும் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பதால் உடல் உஷ்ணம் குறையும். மலச்சிக்கல், பித்தம், கப நோய்கள் சொறி முதலியவை நீங்கும்.மேலும் மன உளைச்சல், எலும்புருக்கி, மூலரோகம், ரத்த வாந்தி நீங்கும், சருமம் பளபளப்பாகும்.
- நெற்பொரியை கஞ்சியாக செய்து உட்கொள்ள வயிற்றுவலி, வெள்ளை, நீர்ச்சுருக்கு, சுரம், நீர் வேட்கை, வாந்தி, மந்தம், பெரு வயிறு, கழிச்சல் முதலியவை தீரும்.
- நெல்லில் இருந்து செய்யப்படும் அவளை குழைய வேக வைத்து உட்கொள்ள கழிச்சல் வயிற்று வலி தீரும்.அவலில் பாலுடன், சிறிது நெய் சேர்த்து உண்ண உடலுக்கு வலிமை உண்டாகும்.