மூலிகைகள்
நுணா மருத்துவ பயன்கள்
தமிழகமெங்கும் காணப்படும் நுணா மரம் வறட்சியையும் வெப்பத்தையும் தாங்கி தானே வளரக்கூடியது. இதற்கு மஞ்சணத்தி, மஞ்சள் நாறி, மஞ்சள் மீனா போன்ற பெயர்களும் உண்டு. இதன் இலை, பட்டை, காய் மருத்துவ பயனுடையது.
பட்டை கரப்பனெடு பாரச்சி லேஷ்மசுர
மொட்டி நின்ற புண்கிரந்தி யோட்டுங்காண் – மட்ட
யேந்து நுணாவி னிலைமாந்தத் தீர்த்து நல்ல
காந்திதரு மேகமடுங் காண்
குணம்
நுணாப்பட்டையானது கரப்பான், கப சுரம், புண், கிரந்தி, இவைகளையும். இலையானது மந்தம், மேகம் இவைகளை போக்கும்.
பயன்கள்
- நுணா இலை நடுவிலுள்ள ஈர்க்குகளை எடுத்து அதனுடன் கரிசலாங்கண்ணி, துளசி, மிளகு, சுக்கு முதலியவற்றை சேர்த்து கஷாயமாக வடித்து குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப 1/4 – 1/2 சங்கு அளவாக விட்டு வர மந்த பேதி நிற்கும்.
- நுணா இலையை அரைத்து புண், சிரங்குகளுக்கு வைத்து கட்ட விரைவில் குணமடையும்.
- இதன் இலைச்சாறை எடுத்து இடுப்பு வலிக்கு பூச ஆறும்.
- பூதகரப்பான் பட்டை, பூவரசம் பட்டை, நுணாப்பட்டை, இலுப்பைப் பிண்ணாக்கு இவைகளை சமனெடையாக சுட்டு கரியாக்கி நல்லெண்ணையில் குழைத்து பூச கரப்பான் நீங்கும்.
- நுணா காய்களை ஒரு கிலோ அளவிற்கு சேகரித்து சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் 250 கிராம் அளவு கல் உப்பு சேர்த்து ஒரு மண்பாண்டத்தில் போட்டு வறுத்து காய்கள் கரியான சமையம் இறக்கி ஆறவைத்து அரைத்து வைத்துக்கொண்டு பல் தேய்த்து வர பல்லரணை, பல்லாட்டம், ஈறுகளில் இரத்தம், சீழ் சொரிதல், பல்கூச்சம் முதலியவை குணமாகும்.