விந்தணுக்களை அதிகரிக்க செய்யும் நீர்முள்ளி
குறுகலான ஈட்டி வடிவ இலைகளையும் நீல கருஞ்சிவப்பு நிற மலர்களையும் கணுக்கள் தோறும் நீண்ட கூர்மையான முட்களையும் உடைய நீர்வளமுள்ள இடங்களில் தானே வளரும் சிறு செடி. செடி முழுவதும் மருத்துவ பயனுடையது.
பாண்டு குளுப்பையரும் பாரித்த நீரேற்ற
மாண்டுவிட்டு நீர்க்கட்டுமாறுங்காண்-பூண்டதொரு
வீக்கமெல்லா நீராய் விடுமேநீர் முள்ளிக்குத்
தாக்கு மயில்விழியாய் சாற்று.
மருத்துவ பயன்கள்
சிறுநீர்ப் பெருக்கியாகவும் தாதுக்கள் அழுகிக் கெடுவதைத் தவிர்க்கும் மருந்தாகவும் செயற்படும். விதை காமம் பெருக்கியாகும்.
நீர்முள்ளிச் சமூலம் நன்கு அலசி இடித்து 200 கிராம், 2 லிட்டர் நீரில் போட்டுச் சோப்பு, நெருஞ்சில் விதை, தனியா வகைக்கு 50 கிராம் இடித்து போட்டு, அரை லிட்டராகக் காய்ச்சி (நீர் முள்ளிக் குடிநீர்) வேளைக்கு 125 மி லி வீதம் தினமும் 4 வேளை கொடுத்து வர ஊதிப் பெருத்த சரீரம் குறையும். வாத வீக்கம், கீல் வாதம், நரித்தலை வாதம், நீர்வழி அடைப்பு, நீர்வழி ரணம், அழற்சி மூன்று நாளில் குணமாகும். 10, 12 நாள் கொடுக்க மகோதரம் தீரும்.
வேர் மட்டும் 10 பங்கு கொதி நீரில் போட்டு 24 மணி நேரம் ஊற வைத்துத் தெளிவு நீரை 2 மணிக்கு ஒரு முறை 30 மி லி கொடுத்து வர நீர்க்கோவை, மகோதரம் குணமாகும்.
நீர் முள்ளி விதை 40 கிராம், நெருஞ்சில் விதை 20 கிராம், வெள்ளரி விதை 10 கிராம் சேர்த்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி பனங்கற்கண்டு கலந்து 1 வாரம் காலை, மாலை கொடுக்க துர்நீர் கழியும். நீர் எரிச்சல், மேக நீர், வாத நீர், உடல் காங்கை நீங்கிச் சப்தத் தாதுக்களும் வலுவடைந்து உடல் பலம், தாதுப் பலம் உண்டாகும்.
விதையைப் பொடித்து வேளைக்கு அரை முதல் ஒரு கிராம் வரை பாலில் கலந்து சாப்பிட்டு வர மேகம், வயிற்றுப்போக்கு, நீர்க்கோவை, இரைப்பிருமல் ஆகியவை குணமாகும். குருதித் தூய்மையடைந்து விந்தூறும்.
நீர்முள்ளி விதையை நீர் விட்டு பிசைந்து வீக்கங்களுக்கு பற்று போட விரைவில் குணமடையும்.