நாவல்பழத்தின் மருத்துவ பயன்கள்
ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் தானே வளரும் பெருமரம்.உண்ணக்கூடிய கருஞ்சிவப்புக் கனிகளையுடையது. தமிழகமெங்கும் காணப்படுகிறது. இலை, பட்டை, பழம், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையது.
பட்டை, சதை, நரம்பு ஆகியவற்றை சுருங்கக் செய்யும் மருந்தாகவும் பழம் சிறுநீர் பெருக்கியாகவும் பசித்தூண்டியாகவும் செயற்படும்.
மாந்தம் விளையும் வலிகரப்பா னுண்டாகுஞ்
சேர்ந்ததொரு நீரிழிவுஞ் சேருமோ – நாந்தலொடு
வாய்வுங் கடுப்பும் வருங்கொதிப்பு தாகமும்போந்
தூயநா வற்பழத்தாற் சொல்.
குணம்
நாவற்பழத்தினால் அக்கினிமந்தம், சரீர நோய், சீதவாதம், கடுத்தல் இவைவுண்டாம் அதிநீரும், வெப்பமும், தாகமும் நீங்கும் என்க.
பயன்கள்
கொழுந்துச்சாறு 1 தேக்கரண்டி, 2 ஏலரிசி, லவங்கப்பட்டைத் தூள் மிளகளவு சேர்த்துக் காலை, மாலை கொடுக்கச் செரியாமை பேதி, சூட்டு பேதி தீரும்.
இலை, கொழுந்து, மாங்கொழுந்து சமன் அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கலக்கிக் கொடுக்கச் சீதபேதி, இரத்தபேதி, கடுப்புடன் போகும் நீர்த்தபேதி ஆகியன குணமாகும்.
நாவல்கொட்டை சூரணம் 2 கிராம் நீருடன் காலை மாலை கொடுக்க மதுமேகம், அதிமூத்திரம் தீரும்.
பட்டைக் குடிநீர் 100 மி லி காலை மாலை குடிக்க மதுமேகம் தீரும்.
நாவல் பழத்தை அளவாக சாப்பிட்டு வந்தால், தமனிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறைந்து, மாரடைப்பு வருவதை குறைக்கும்.
நாவல்பழம் வியர்வையை பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். நாவல் பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் காய வைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான நீரில் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். சர்க்கரை நோய் கட்டுப்படும்.