மூலிகைகள்
நீர்க்கோவையை நீக்கும் நல்வேளை
நல்வேளை நீண்ட காம்புடன் நன்றாக விரிந்த மணமுடையா இலைகளையும் வெண்மையும் கருஞ்சிவப்பும் கலந்த மலர்களையும் உடைய குறுஞ்செடிகள். மழைக்காலங்களில் தமிழகமெங்கும் காணப்படும். இதனை நல்ல வேளை, தை வேளை என்றும் அழைப்பதுண்டு. நல் வேளை இலை, பூ, விதை ஆகியவை மருத்துவ பயனுடையது.
சிரநோய் வலிகுடச்சல் தீராச் சயித்ய
முரநோ யிவைக ளொழிவு – மூரமேவும்
வில்வேளைக் காயும் விழியாய் பசிகொடுக்கும்
நல்வேளை தன்னை நவில்
குணம்
இலை நீர்க்கோவை நீக்கும், பூ உடல் எடையை குறைக்கவும், பசியை உண்டாக்கவும். விதை வயிற்றுப் புழுக் கொல்லியாகவும் குடல் வாய்வு அகற்றியாகவும் பயன்படும்.
மருத்துவ பயன்கள்
- நல்வேளை மூலிகையை இடித்து பிழிந்து விட்டு சக்கையை தலையில் வைத்து கட்டி எடுக்க நீர்க்கோவை, தலைபாரம், தும்மல் தலையில் குத்தல் குடைச்சல் ஆகியவை தீரும்.
- நல்வேளை இலைச்சாறு 1 துளி காதில் விட்டு வர சீழ்வருதல் நிற்கும்.
இலையை அரைத்து பற்றுப்போட சீழ் பிடித்து கட்டிகள் உடைந்து ஆறும். - விதையை நெய் விட்டு வறுத்து பொடி செய்து சிறுவர்களுக்கு அரைகிராம், பெரியவர்களுக்கு 4 கிராம் வீதம் காலை மாலை என மூன்று நாட்களுக்கு கொடுத்து நான்காம் நாள் பேதிக்கு கொடுக்க குடலில் உள்ள தட்டை புழுக்கள் அழியும் .
- நல்வேளை இலை 1 பிடி, சுக்கு 1 துண்டு, மிளகு 6, சீரகம் 1 சிட்டிகை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 200 மிலி யாக காய்ச்சி, தினமும் 3 வேளை 50மிலி அளவு குடித்து வர வாதசுரம் சீதளச்சுரம் ஆகியவை தீரும்.
- நல்வேளையின் பூச்சாறு 10 துளி தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கபம், கண மந்தம், மூச்சுத்திணறல், சுரம், நீர்க்கோவை ஆகியவை தீரும்.