கல்லடைப்பு, சதையடைப்பை குணமாக்கும் நத்தைச் சூரி
பட்டையான தண்டுகளையும் எதிரடுக்கில் அமைந்த காம்பற்ற இலைகளையும் மிகச்சிரிய மங்கலான பூக்களையும் உடைய சிறு செடி இனம். தமிழகத்தில் மணற்பாங்கான இடங்களிலும் தோட்டங்களிலும் தானாகவே வளர்கிறது. குழி மீட்டான், தருணி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையது.
சுத்தமுறு மாநத்தைச் சூரியெனும் பூண்டதனால்
மெத்தநல மேயுண்டாம் மேதினியில் – வித்திற்கோ
வெப்ப முறுபேதி வெண்சீதக் கட்டுப்போம்
துப்பறிந்த மாதே நீ சொல்.
குணம்
நத்தைச்சூரிப் பூண்டால் தேகத்திலுள்ள பல பிணிகள் நீங்கும். வித்தின் உபயோகத்தால் உஷ்ணபேதி, சீதபேதி இவைகள் நீங்கும். வேர் நோய் நீக்கி உடல் தேற்றவும் தாது பலம் அளிக்கவும் பயன்படும். விதை தாதுக்களின் எரிச்சலைத் தவிர்க்கவும் தாது வெப்பத் தணிக்கவும் மருந்தாக பயன்படுகிறது.
மருத்துவ பயன்கள்
10 கிராம் வேரை பசும்பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை கொடுத்து வர தாய்ப்பால் பெருகும்.
20 கிராம் வேரை சிதைத்து 200 மிலி கொதி நீரில் போட்டு 2 மணி நேரம் உரிய பின் வடித்து 50 மி லி யாக நாள் ஒன்றுக்கு 3 வேளை குடித்து வர உடம்பை பற்றிய எவ்வித நோயும் படிப்படியாகக் குணமடையும்.
விதையை வறுத்துப் பொடித்து நீரில் இட்டுக் காய்ச்சி வடித்திப் பால் கற்கண்டு கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணியும். கல்லடைப்பு, சதையடைப்பு, வெள்ளை ஆகியவை குணமாகும்.
விதையைப் பொடித்து சமனளவு கற்கண்டு பொடி கலந்து 5 கிராம் அளவாகக் காலை, மதியம், மாலை சாப்பிட்டு வர வெப்புக் கழிச்சல், சீதக் கழிச்சல் ஆகியவை குணமாகும்.
செடியை அரைத்து பற்றிடக் கல் போன்ற வீக்கம் கரையும்.