சீத்தாப்பழம் மருத்துவ குணங்கள்
சீத்தாப்பழம் கூலான சதைப் பகுதியும் நறுமணத்துடன் கூடிய இனிப்பு சுவையும் கொண்டது. வெப்ப மண்டல பகுதிகளின் ருசியான கனிகளில் இதுவும் ஒன்று.
தென் அமெரிக்காவின் ஆண்டீஸ் பள்ளத்தாக்குப் பகுதிகளான பெரு, ஈக்வடாரை தாயகமாகக் கொண்டவை சீத்தாப்பழம். பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறங்களில் இவ்வகை கனிகள் இருக்கும். இதன் தோற்பரப்பு கடினமான வரிகளைக் கொண்டது போல் காணப்படும். சீத்தாப்பழத்தின் தாவர குடும்பம் அன்னோ நேசியே. இதன் அறிவியல் பெயர் அன்னோன செரிமோலா. 4 வகையான சீத்தாப்பழங்கள் உள்ளன.
பித்தகப மெத்தப் பெருகுமந்த மேலாடுஞ்
சித்த மதிரியாக்கஞ் சேருங்கா- ணத்துலவும்
பூத்தனாத் தாரும் பொலன்கொடியே பூவுலகிற்
சீத்தாக் கனியார் றெளி.
பயன்கள்
சீத்தாப்பழம் தேகத்தைப் பெருக்கச்செய்யும் இருதயத்திற்கு வலிமையைக் கொடுக்கும் உள்ளிருக்கப்பட்ட வியாதிகளை வெளிப்படுத்தும் பித்தத்தை உபரி செய்யும.
மாம்பழத்திற்கு நிகரான ஆற்றல் வழங்கக் கூடியது சீத்தாப்பழம். 100 கிராம் சீத்தாப்பழ சதை பற்றில் 75 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கும். சீத்தாப்பழத்தில் கெட்ட கொழுப்புகள் எதுவும் கிடையாது.
எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய நார்சத்து சீத்தாப்பழத்தில் உள்ளது. 100 கிராம் பழத்தில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் குடற்புற்று நோயை உருவாக்கும் நச்சுப் பொருட்கள் குடலில் படியாமல் பாதுகாப்பதிலும் செயலாற்றுகிறது.
இயற்கையில் சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின் – சி மிகசிறந்த அளவில் காணப்படுகிறது. இது உடலை பல்வேறு தொற்றுநோய் கிருமிகளிடம் இருந்தும் காக்கவல்லது.
சோடியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற தாதுஉப்புக்களும் கணிசமாக உள்ளது.
சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்
சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
சீத்தாப்பழத்தை தோல்பகுதியைத் தவிர்த்து நேரடியாக வேறு எதுவும் சேர்க்காமல் ருசித்து உண்ணலாம்.
பழக் கலவை மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் சீத்தாப்பலன்கள் பங்கு வகிக்கிறது.
புத்துணர்ச்சி பெற சீத்தாப்பழ ஜூஸ் சாப்பிடலாம்.