மூலிகைகள்
தாது விருத்திக்கும், உடல் பொலிவுக்கும் கோரைக்கிழங்கு
கோரைக்கிழங்கு தட்டையான இலைகளையுடைய புல் செடி. முட்டை வடிவ கிழங்குகளை கொண்டது. இது தமிழகமெங்கும் தானே வளர்கிறது. கோரைக்கிழங்கிற்கு முத்தக்காசு என்றும் அழைக்கப்படுகிறது.
அதிசாரம் பித்த மழற்றாக மையங்
குதிவாதஞ் சோபங் கொடிய – முதிர்வாந்தி
யாரைத் தொடர்ந்தாலு மவ்வவர்க்கெல் லாங்குளத்துக்
கோரைக்கிழங்கைக் கொடு
குணம்
கோரைக்கிழங்கால் பித்தம், தேக எரிச்சல், தாகம், கபம், குதிகால் வாதம், குளிர் சுரம், வாத சுரம் முதலியவை நீங்கும் என்க.
பயன்கள்
- கோரைக்கிழங்கை மேல் தோலை நீக்கி சுத்தம் செய்து இடித்து பொடி செய்து காலை, மாலை என 1 கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட புத்திக்கூர்மை, தாது விருத்தி, உடல் பொலிவு உண்டாகும்.
- கோரைக்கிழங்கு, சந்தனத்தூள், வெட்டிவேர், பற்பாடகம், பிரமட்டை, சுக்கு வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 125 மி.லி காய்ச்சி 1 1/2 அவுன்ஸ் வீதம் காலை, மாலை கொடுக்கத் தாகம், சுரம் இவைகள் நீங்கும்.
- கிழங்கை குடிநீர் செய்து காய்ச்சிப் பாலில் சேர்த்து மோராக்கி அதில் உணவு கொள்ளக் குழந்தைகளுக்கு காணும் பசியின்மை செரியாமை தீரும்.
- கோரைக்கிழங்கு, கண்டங்கத்திரி வேர், நிலவேம்பு, சீந்தில் கொடி, சுக்கு, புளியாரைக்கீரை, செஞ்சந்தனத்தூள், கசகசாத்தோல் வகைக்கு 15 கிராம் அளவு வீதம் சிறிது இடித்து ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 125 மி.லி யாக வரும் வரை காய்ச்சி அதனுடன் சிறிது திப்பிலி சூரணம் சேர்த்து கலக்கி தினமும் 3 வேளை 3 நாட்களுக்கு கொடுக்க விடாதா சுரம் நீங்கும்.