என்றும் இளமைக்கு கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி தமிழகெமெங்கும் ஈரநிலத்தில் தானே வளர்வதுண்டு. இதில் வெள்ளை, மஞ்சள் நிற மலர்களை கொண்ட இரு வகை உண்டு. இது ஒரு கற்ப மருந்து, எல்லா பிணிகளையும் நீக்க வல்லது. கரிசலாங்கண்ணி செடி முழுவதும் மருத்துவ பயனுடையது.
மருத்துவ பயன்கள்
மஞ்சள் கரிசலாங்கண்ணி, தூதுவளை சேர்த்து சமைத்து உண்டு வர என்றும் இளைமையாக இருக்கலாம்.
வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலையை அரைத்து அடை தட்டி காய வைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி கருமையாகவும் செழித்தும் வளரும்.
கரிசலாங்கண்ணி, நல்லெண்ணெய் இரண்டையும் (2 லிட்டர்) கலந்து அதில் 25 கிராம் அளவு அதிமதுர தூள் சேர்த்து பதமுற காய்ச்சி வடிகட்டி காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர இருமல், குரல் கம்மல், சளி, இரைப்பிருமல் தீரும்.
கரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 5, துளசி இலை 5, கீழாநெல்லி ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றை கழுவி காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல், பித்த நீர் சுரபின்மை, இரத்தத்தில் மிகு பித்தம், இரத்த சோகை ஆகியவை தீரும்.
10 கிராம் கரிசலாங்கண்ணி இலையுடன் 2 கிராம் மிளகு சேர்த்து வெண்ணைபோல் அரைத்து மோரில் கலக்கி காலை, மாலை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை தீரும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணியுடன், பழம் புளி சம அளவு எடுத்து அரைத்து 2 நெல்லிக்காயளவு காலை மாலை இருவேளை 12 நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை இறக்கம் குணமாகும்.