உடலும் ஊட்டச்சத்தும்
மனிதன் உயிர் வாழ உணவு அவசியமாகிறது. நம்முடைய உடம்பை சீராக வைத்துக்கொள்ளவும் அன்றாட வேலைகளை செய்யவும், சத்தான உணவு தேவைப்படுகிறது. உணவு சுவையாக இருக்கவும், ஊட்டச்சத்தை பெற காய்கறிகளை சேர்த்துகொள்கிறோம். பழங்கள் இனிப்பாகவும், ஓரளவு பசியை தனிப்பதாகவும் இருப்பதால் விரும்பி உண்கிறோம்.
உடலுக்கு தேவையான வைட்டமின் A, வைட்டமின் C போன்ற ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கி இருக்கின்றன. காய்கள், பழங்களில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.
நாம் உண்ணும் உணவானது, உடம்பில் எரிபொருளாகப் பயன்படுகிறது. அதாவது நாம் உட்கொள்கின்ற உணவை நமது உடம்பிலிருக்கும் செல்கள் எரிபொருளாக பயன்படுத்திக்கொள்கிறது. நம் உடம்பிற்கு எவ்வளவு உணவு தேவை படுகிறோதோ அதை மட்டுமே உண்ண வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் நமக்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். நாம் தினசரி உண்ணும் இந்த உணவில் புரத சத்து, மாவு சத்து, கொழுப்பு சத்து, ஊட்டச்சத்து, இரும்புசத்து மிக முக்கியமானவை.
புரத சத்து :
ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, சோயா பீன்ஸ், கோதுமை, மீன், பட்டாணி, வேர்க்கடலை, பால், தயிர், முட்டை, ஆகியவற்றில், மிகுதியாக காணப்படுகிறது.
மாவுச்சத்து :
நம் மக்கள் அதிகமாக மாவுச்சத்து உணவுகளையே அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். அதாவது அரிசி சோறு, இட்லி, தோசை, சோளம், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்றவற்றில் மாவுச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இவ்வகை உணவுகளை குறைத்து உண்ண வேண்டும். அப்போதுதான் நம் உடலுக்கு நேரடியாக கிடைக்கும் எரிபொருளை குறைக்க முடியும். அன்றாடம் நாம் உட்கொள்ளும் உணவுகளை சீராக எரித்து அதிலிருந்து கிடைக்கும் சக்தியை நம் உடம்பில் உள்ள செல்கள் பயன் படுத்துவதை ‘வளர்ச்சிதை மாற்றம்’ என்கிறோம்.
கொழுப்புச்சத்து :
எண்ணெய், சில வகை இறைச்சி சம்பந்தப்பட்ட தயாரிப்புகள், வெண்ணெய், நெய், பருப்பு வகைகள், சிலவகை பால், சிலவகை மீன்கள், ஆகியவற்றில் கொழுப்புச்சத்து நிறைய உள்ளன.
வைட்டமின் ஏ :
பச்சைக்காய்கறிகள், மஞ்சள் பூசணிக்காய், பப்பாளி, மாம்பழம், கேரட், ஈரல், முட்டை முதலியவற்றில் வைட்டமின் ஏ மிகுதியாக இருக்கின்றன.
வைட்டமின் சி :
பழங்கள், காய்கள், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் அதிகம் உள்ளன.
இரும்புச்சத்து :
இறைச்சி, பட்டாணி, வேர்க்கடலை, கீரைகள், மீன், பீன்ஸ், கேழ்வரகு ஆகியவற்றில் இரும்புச்சத்து உள்ளன.
நம் உட்கொள்கின்ற உணவுகளுக்கு உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி இருக்க வேண்டும். ரசாயன முறையில் நாம் உண்ணும் உணவு எரிக்கப்பட்டு செல்களால் பயன்படுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் அவ்வுணவு எரிபொருளாக மாறாமல் கொழுப்புச்சத்தாக மாறிவிடும். நாம் உட்கொள்ளும் உணவிற்கும், செய்கின்ற வேலைக்கும் சம நிலை இருக்க வேண்டும்.
அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் சிக்கனமான உணவு பழக்கம் வேண்டும். இல்லாவிட்டால் இவர்களுக்கு கொழுப்பு சத்து அதிகமாகி இருதய நோய்கள், இரத்த அழுத்தம், இரத்த குறைபாடுகள், இரத்த புற்று நோய், சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிவிடுகிறது.
பச்சை காய்கறிகள், காரட், பீட்ரூட், பழங்கள், கீரைகள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட பழகவேண்டும்.