மூலிகைகள்
உடல் உள்ளுறுப்புகளை பலப்படுத்தும் இலவங்கப்பூ (கிராம்பு)
இலவங்கம் சமையலில் பயன்படுத்தப்படும் நறுமண பொருளாகும். இதுவே கிராம்பு என்று அழைக்கப்படுகிறது. வாசனைப்பொருள்கள் தயாரிக்க பயன்படுகிறது. இலவங்கம் வாய்துர்நாற்றம், ஈறு வீக்கம், பல் வலி ஆகியவற்றிற்க்கு சிறந்த மருந்தாகும். அதனாலே பற்பசை, வாய் கொப்பளிக்கும் நீர் ஆகியவற்றில் சேர்க்கப்படுகிறது. இது அக உறுப்புகளை பலப்படுத்தும்.
பித்த மயக்கமறும் பேதியொடு வாந்தியும்போம்
சுத்தவிரத் தக்கடுப்புந் தோன்றுமோ – மெத்த
விலவங்கங் கொண்டவருக் கேற்றசுக மாகு
மலமங்கே கட்டுமென வாழ்த்து
குணம்
இலவங்கப்பூவுக்குப் பித்தகோபம், அதிசாரம், உதிரப்போக்கு, ஆசனவாய்க்கடுப்பு, சிவந்த கறுத்த மச்சங்கள், வாதநோய்கள், கண்ணில் பூ படர்தல் முதலிய நோய்கள் நீங்கும். உடல் பலப்படும்.
பயன்கள்
- இலவங்கத்தை இடித்து பொடிசெய்து அரைகிராம் அளவு காலை, மாலை இருவேளை தேனில் குழைத்து சாப்பிட அக உறுப்புகள் அனைத்தும் பலம் ஏற்படும்.
- இலவங்கைப்பொடியை 2 கிராம் அளவு எடுத்து பனைவெல்லத்தில் கலந்து சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரச்சிக்கலும், அதனால் ஏற்படும் வலியையும் குணப்படுத்தும்.
- இலவங்கப்பூ பொடியை பற்பொடியுடன் சிறிதளவு சேர்த்து பல்தேய்த்து வர வாய்நாற்றம், பல்வலி, ஈறுவீக்கம் முதலியவை குணமாகும்.
- தீராத தலைவலி நீங்க கிராம்பு பொடியை தாய்ப்பாலில் கலந்து நெற்றியில் பற்று போட குணமாகும்.
- இலவங்கம் சீரண சக்தியை அதிகரிக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குகிறது.
- இலவங்கத்தை நீரில் போட்டு நன்றாக அதன் சாறு இறங்கும் வரை கலக்கி அந்த நீரை பயன்படுத்த கண்களில் ஏற்படும் அழற்சி நீங்கும்.