மூலிகைகள்
வெற்றிலை மருத்துவ பயன்கள்
வெற்றிலை பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்றாகும். இதற்கு தாம்பூலம், நாகவல்லி, திரையல் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. வெற்றிலை பல நோய்களை குணமாக்கக்கூடியது அதனாலயே நம் முன்னோர்கள் கலாச்சார விசேஷங்களில் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத பொருளாக வைத்திருக்கின்றனர் வெற்றிலையை. இதற்கு காரணம் இதன் மருத்துவ குணமாகும்.
ஐய மறுங்கா ணதன்சாரங் கொண்டக்காற்
பையச் சயித்தியம்போம் பைந்தொடியே – மெய்யிற்
கடியின் குணம்போகுங் காரவெற்றி லைக்குப்
படியுமுத் தோடத்தைப் பார்
குணம்
சளி, இரத்தமாக வயிற்றுப்போக்கு, பூச்சிக்கடியினால் ஏற்படும் நோய்கள் இவைகள் நீங்கும் என்க .
பயன்கள்
- வெற்றிலையில் சிறிது நல்லெண்ணெய் தடவி, நெருப்பின் அனலில் வதக்கி தாங்கக்கூடிய சூட்டில் குழந்தையின் மார்பில் போட்டு வைக்க கபத்தை கரைத்து இருமல், இழுப்பு, மூச்சுமுட்டல் இவைகளை குணப்படுத்தும்.
- சிலந்தி, தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் கடித்து விட்டால் 2 வெற்றிலையுடன் 9 மிளகு சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் அதன் பாதிப்பு நீங்கும்.
- வெற்றிலை சீரண சக்தியை கொடுப்பதால் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடுவது சிறந்தது.
- பெண்களுக்கு பால் கட்டிக்கொண்டு வீக்கமாக இருக்கும் அதற்கு வெற்றிலையை அனலில் சுட்டு மார்பில் கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.
- வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட சலதோசம், மந்த அக்கினி, தொண்டைக்கம்மல் ஆகியவை நீங்கும்.