வாத நோய்களை தீர்க்கும் சித்தாமுட்டி
சித்தாமுட்டி அல்லது சிற்றாமுட்டி என்று அழைக்கக்கூடிய மூலிகை பற்கள் உள்ள சிறு மடல் இலைகளையும், உருண்டையான வடிவ காய்களையும் கொண்ட சிறு செடி. தமிழகமெங்கும் தானாக வளரக்கூடியது. இதன் முழு செடியும் மருத்துவ பயனுடையது.
அத்தி சுரமுத லனந்தசுரம் பித்தமும்போ
மெத்த விழிக்கொளியாம் லீறுதயி – லத்திற்காம்
நற்றா மரைத்திருவு நாடு மெழிற்றிறுவே
சிற்றாமுட் டித்தூரை செப்பு
குணம்
தாதுக்களினால் ஏற்படக்கூடிய எரிச்சலை தனிக்கக்கூடியது. கடுமையான வாத நோய்களை தீர்ப்பதற்குரிய மருந்தாகும்.
சித்தாமுட்டி பயன்கள்
சித்தாமுட்டி வேர் 10 கிராம் எடுத்து இடித்து 100 மி.லி தண்ணீரில் போட்டு 25 மி.லி யாகக் காய்ச்சி 2 சிட்டிகை திப்பிலி சூரணம் அல்லது திரிகடுகு சூரணம் சேர்த்து காலை, மாலை 3 நாள் சாப்பிட வாதம், சுரம் தீரும்.
சிற்றாமுட்டி வேர், தூதுவளை ஈர்க்கு , கருங்காஞ்சொறி வேர், சீந்தில் கொடி, பற்பாடகம், நொச்சி செடி, பேராமுட்டி வேர், கடுக்காய் தோல் இவற்றில் ஒவ்வொன்றிலும் 10 கிராம் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மிலியாக காய்ச்சி 3 அளவாக பிரித்து 3 நாட்கள் கொடுக்க எத்தகைய சுரமாக இருந்தாலும் தீரும்.