கடுக்காய் மருத்துவ பயன்கள்
கடுக்காய்க்கு உள்ள வேறு பெயர்களில் ஒன்று ஹரிதகி இது மஹாவிஷ்ணுவை குறிக்கும்.பெருமாளுக்கு இணையாக போற்றப்படும் கடுக்காய் திரி பலாவில் ஒன்று.
கடுக்காயை பயன்படுத்தும் முன் சுத்தி செய்து கொள்ளவும், கடுக்காயை அப்படியே பயன்படுத்தினால் அது நஞ்சாகும்.
சுத்தி செய்யும் முறை
கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதை பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை அரிசி களைந்த தண்ணீரில் கலந்து 6 மணி நேரம் ஊறவைத்து இடித்து தூள் செய்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவ பயன்கள்
15 கிராம் கடுக்காய்ப் பொடியுடன் 4 கிராம் கிராம்புப் பொடி சேர்த்து 100 மி லி நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி 1 தேக்கரண்டி நெய் சேர்த்து அதிகாலையில் கொடுக்க வயிற்று வலி இன்றி 2 அல்லது 3 முறை மலம் கழியும். இம்முறையை அவ்வப்போது பயன்படுத்தி வர அக வெப்பத்தைத் தணிக்கும். இரைப்பை பலப்படும். இரத்தம் தூய்மை அடையும்.
கடுக்காய் பொடியைப் பற்பொடியுடன் கலந்து பல் தேய்த்து வர ஈறுவலி, வீக்கம், இரத்தம் கசிதல் ஆகியவை தீரும்.
கடுக்காய்ப் பொடியுடன் பாதி எடை திராட்சை கலந்து அரைத்து 1 கிராம் அளவாகக் காலையில் சாப்பிட்டு வார பித்த வாந்தி, தலைச்சுற்றல்,வாயிக் கசப்பு ஆகியவை குணமாகும்.
கடுக்காயை நீர்விட்டு இழைத்து அதனுடன் சிறிது மலைவேப்பிலை சாற்றைக் கலந்து தடவி வர ஆறாத புண்களும் ஆறும்.
கடுக்காய் தோல், துளசி சம அளவு, கீழாநெல்லிவேர் பாதியளவு எடுத்து, இவற்றை நன்றாக அரைத்துக் கொண்டு, ஒரு பாலாடை அளவு புளித்த மோரில் 10 கிராம் மருந்தை கலக்கி 3 நாள் காலை மாலை உட்கொள்ள கொடுக்க குழந்தைகள் மண், சாம்பலை எடுத்து உண்பதை நிறுத்தி விடும்.
கடுக்காய், சாதிக்காய், துளசிவிதை, சுக்கு இவை நான்கையும் சம அளவு பொடித்து இரவு படுக்கும் முன் ஒரு சிட்டிகை அளவு பால் கற்கண்டு கலந்து 48 நாட்கள் குடித்து வர ஆண்களின் மலட்டுத் தன்மை நீங்கும்.
என்றும் இளமையாக இருக்க கடுக்காய்
கடுக்காயை அரிசி கழுவிய நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து மறுநாள் வெயிலில் உலர்த்துங்கள் அதன்பின்னர் 3 நாள் எலுமிச்சம் பழச்சாற்றில் அதை ஊறவைத்து மறுநாள் மீண்டும் வெயிலில் உலர்த்துங்கள். இதையடுத்து தேனை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் வெயிலில் உலர்த்திய கடுக்காய் துண்டுகளை போட்டு 10 நாள் ஊறவைத்து விடுங்கள். அவை நன்கு ஊறியதும் இரவு படுக்கும் முன் ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டு வர உடல் வன்மை பெரும் இளமையும், அழகும் உண்டாகும்.