மூலிகைகள்
உடலுக்கு குளிர்ச்சி தரும் விலாமிச்சு வேர்
விலாமிச்சு வேரானது வெட்டிவேரைப்போலவே சன்னமாகவும் கூந்தலை போன்று அடர்த்தியாகவும் நீண்டு கருநிறமாக பூமியில் இறங்கி இருக்கும். விலாமிச்சு வேர் அதிக நறுமணமுடையது.
மேகம் விழியெரிச்சல் வீறிரத்த பித்தமொடு
தாகமத மூர்ச்சைபித்தஞ் சார்மயக்கஞ் – சோகஞ்
சிரநோ யிவையேகுஞ் செய்யவிலா மிச்சுக்
கெரிசுரமு மின்றென றிசை
குணம்
விளாமிச்சினால் மேக நீர், கண் எரிச்சல், உதிர பித்தம், தாகம், தெளிவற்ற மனநிலை, மயக்கம், தலைவலி, தீச்சுரம் இவைகள் போம் என்க
பயன்கள்
- விலாமிச்சு வேரை முடித்தைலங்களில் சேர்க்க அதிக வாசனையை கொடுப்பதுடன் கண், கை, கால் முதலிய இடங்களில் உள்ள எரிச்சலை சாந்தப்படுத்தும்.
- விலாமிச்சு வேரை பித்த கியாழங்களில் சேர்த்து கொடுக்க தாகம், கண் எரிச்சல், உதிர பித்தம், தாகம், தெளிவற்ற மனநிலை, மயக்கம், தலைவலி, தீச்சுரம் முதலியவற்றை குணமாக்கும்.
- விலாமிச்சு வேர் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது அதனால் இதை காய்ச்சலுக்கு கொடுக்கும் நிலவேம்பு குடிநீரில் சேர்க்கப்படுகிறது.