மூலிகைகள்
வாத நோய்களை குணமாக்கும் வாதநாராயணன்
இரு சிறகுபோல் சிறு இலைகளையும் உச்சியில் பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர் மஞ்சள் நிறமுடைய மரம். வாதரசு, வாதமடக்கி, ஆதிநாராயணன் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. தமிழகமெங்கும் காணப்படும். இதன் இலை, வேர் ஆகியவை மருத்துவ பயனுடையது.
நன்மை தரும்வாத நாரா யணமரத்தின்
தன்மை இனிதுரைக்கின் தாழ்குழலே – வன்மையுறும்
வாத வலிகுடைச்சல் வரட்டுகணுச் சூலைஎலாம்
பூதலத்தில் விட்டோடிப் போம்
குணம்
வாதநாராயண மரத்தால் வாதவலி, குடைச்சல், கீல்வாதம். முதலியவை நீங்கும் என்க.
பயன்கள்
- வாதநாராயணன் இலையை எடுத்து சிறிது மணலை சேர்த்து வறுத்து ஒரு துணியில் கட்டி பொறுக்கக்கூடிய சூட்டில் நோயுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுப்பதுண்டு. இத்தகைய சிகிச்சையினால் கால்களில் காண்கின்ற வீக்கம், பிடிப்பு முதலியவை குணமாகும்.
- இலையை போட்டு கொதிக்க வைத்து குளிக்க உடம்பு வலி தீரும்.
- வாதநாராயணன் இலைச்சாறு 1 லிட்டர், விளக்கெண்ணெய் 1 லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 40 கிராம் வெண்கடுகு 10 கிராம் அரைத்துக் கலக்கி பதமாகக் காய்ச்சி வடித்து ( வாதமடக்கித் தைலம் ) காலை மட்டும் 2 தேக்கரண்டி சாப்பிட வாத ரோக, கீல் வாயு, முடக்கு வாதம், நடுக்கு வாதம், நரம்புத்தளர்ச்சி, கை-கால் குடைச்சல் வலி, நரித்தலை வாதம் ( முழங்கால் முட்டி வீக்கம் ) தீரும்.
- வாதநாராயணன் இலையை உலர்த்தி பொடித்து 3 கிராம் அளவு நாள்தோறும் 1 முறை வெந்நீரில் சாப்பிட மேக நோய், வாதம் தீரும்.
- இதன் இலைச்சாறு 1 அவுன்ஸ் வீதம் குடித்து வர வாத வீக்கம், குடைச்சல் வலி தீரும்.
- வாதநாராயணன் இலைச்சாறு 1 லிட்டர், மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, கறுப்பு வெற்றிலை இவற்றின் சாறு வகைக்கு கால் லிட்டர் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் பொடித்து அரைத்து அரைலிட்டர் பசும்பாலில் கலக்கி பதமாக காய்ச்சி 21 வெள்ளருக்கம்பூவை நசுக்கி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு மேற்ப்பூச்சாக தடவி பிடித்து விடப் பக்க வாதம், பாரிச வாயு, நரம்பு இழுப்பு முக இசிவு, முகவாதம், கண், வாய், நாக்கு, உதடு, இழுப்பு ஆகியவை தீரும்.