விசக்காய்ச்சல், விசப்பேதி வராமல் தடுக்கும் வசம்பு
வசம்பு அனைவரின் வீட்டிலும் வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான மூலிகையாகும். வசம்பு காரத்தன்மை கொண்டது. விஷங்களை முறிக்கக்கூடியது. வசம்பினால் திக்குவாய் நீங்கும். அதனாலேயே ” வாயில் வசம்பு வைத்து தேய்க்க ” என்று கூறுவதுண்டு.
பாம்பாதி நஞ்சற் புதப்புண் வலிவிடபா கங்குன்மஞ்
சூம்பா ரிரத்தபித் தம்முக நாற்றம்வன் சூலைசந்நி
வீம்பாம்பை சாசம் பிலீகஞ் சிலிபதம் வீறிரும
றாம்பாங் கிருமி யிவையேரு மாசிவ சம்பினையே
குணம்
வசம்பை உபயோகிக்க விஷங்கள், அற்புத விரணம், ஐவகை வலி, குன்மம், ரத்த பித்தம், வாய் நாற்றம், சூலை, சந்நி பாதம், பைசாசம், பீலிகநோய், பாதவன்மிகம், காசம், நீண்ட மலக்கிருமி ஆகிய இவைகள் போம் என்க.
சளியை போக்கும், பசியை தூண்டும்
வசம்பை சிறிது வறுத்து இடித்து பொடி செய்து கால் கிராம் அளவு தேனில் கலந்து கொடுக்க சளி, வாயு ஆகியவற்றை நீக்கும். நல்ல பசியை உண்டாக்கும்.
வாந்தி குணமாக
வசம்பை சுட்டுச் சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவ வாந்தி, ஒக்காளம் தீரும்.
வீக்கங்கள், கட்டிகள் குணமாக
சுக்குடன் வசம்பை தண்ணீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட விரைவில் குணமடையும்.
சுவாச கோளாறுகள் நீங்க
வசம்பை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு அரைகிராம் எடை அளவு தேனில் கலந்து 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்க சுவாசகாச நோய் தீரும்.
நோய்கள் வராமல் தடுக்க
விசக்காய்ச்சல், விசப்பேதி முதலியவை உண்டாகிற காலத்தில் ஒரு துண்டு வசம்பை வாயிலிட்டு சிறிது நேரம் வைத்திருக்க நோய்கள் வராமல் தடுக்கும்.
வயிற்று வலி தீர
வசம்பை சுட்டு கரியாக்கி விளக்கெண்ணெயில் குழைத்து அடிவயிற்றில் பூச வாயுவையும், வயிற்று வலியையும் நீக்கும்.
குழந்தைகளுக்கு உண்டான பேதி குணமாக
வசம்பை சுட்டு கரியாக்கி கால் கிராம் அளவு எடுத்து தாய்ப்பாலில் கலக்கி சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப்பிசம், பேதி, வலி இவைகள் நீங்கும்.
குழந்தைகளின் உடல் வலியை போக்கும்
ஒரு துண்டு வசம்பை தண்ணீரில் போட்டு காய்ச்சி குழந்தைகளை குளிக்க வைக்க வலி நீங்கும்.
அலர்ஜி
வசம்பை வெந்தயத்துடன் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டு வர அலர்ஜி குணமாகும்
நரம்பு தளர்ச்சி குணமாக
வசம்புடன் சிறிது கருப்பட்டி சேர்த்து பொடி செய்து காலை மாலை இரு வேளை சாப்பிட நரம்பு தளர்ச்சி குணமாகும்.