மூலிகைகள்
சிறுநீர் கல்லடைப்பை கரைக்கும் யானை நெருஞ்சில்
யானை நெருஞ்சில் அல்லது பெரு நெருஞ்சில் என்று அழைக்கப்படும் மூலிகை சிறுநீர் கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகும். இதன் இலை வழவழப்பாக இருக்கும். நம் முன்னோர்கள் இதன் இலையை தலைக்கு தேய்த்து குளிக்க பயன்படுத்தி வந்தார்கள்.
மேகத்தைப் போக்கிவிடும் வெண்குஷ்டந் தானொழிக்கு
தேகத்திற் கல்லடைப்பைத் தீர்க்குங்கா ணாகததாத்
தேனையரும் பாகைத் திருத்துங் கிளிமொழியே
யானை நெருஞ்சி லது
குணம்
குளிர்ச்சியையுடைய யானை நெருஞ்சில் வெள்ளை வீழல், வெண்குஷ்டரோகம், தேக எரிவு, உழலை, தாகம், பித்தமயக்கம் ஆகிய இவைகள் போக்கும் என்க.
பயன்கள்
- யானை நெருஞ்சில் இலை, காம்பு, காய் முதலியவற்றை பால் அல்லது தண்ணீரில் போட்டு கலக்கி கொண்டிருந்தால் அது திரவம் போல் குழம்பாக மாறும் அதை வடித்து சர்க்கரை சேர்த்து சாப்பிட நீர் தாராளமாக இறங்கும். மேலும் நீர்க்கடுப்பு, தாது உடைச்சல் முதலியவை நீங்கும்.
- மேற்கண்டவாறு செய்த குழம்பினை தினம் ஒரு வேளை காலையில் ஒரு அவுன்ஸ் வீதம் 10 நாட்கள் சாப்பிட புதிதாக உண்டாகிய வெள்ளை நீங்கும்.
- யானை நெருஞ்சில் செடியை பறித்து லேசாக இடித்து தண்ணீரில் 10 நிமிடம் அலசி குழம்புபோல் ஆனதும் வடிகட்டி 50 மிலி அளவு குடித்து வர கல்லடைப்பு நீங்கும். சிறுநீர் கல் கரைந்து விடும்.
- யானை நெருஞ்சில் சமூலத்தை ( இலை, வேர், காம்பு என அனைத்தும் சேர்ந்த பொடி) ஒரு கொட்டை பாக்கு அளவு தயிரில் கலக்கி தினம் ஒருவேளை காலை நேரத்தில் 3 நாட்கள் சாப்பிட நீர்க்கட்டு, நீர் எரிச்சல், தேக எரிச்சல் இவைகள் நீங்கும்.
- இதன் இலையை அலசி அந்த தண்ணீரை கொண்டு ஷாம்பூக்கு பதில் உபயோகிக்கலாம். இது முடிக்கு நல்ல மென்மையை கொடுக்கும். இது ஒரு இயற்கை ஷாம்பு போல் உபயோகிக்கலாம்.
- யானை நெருஞ்சில் இலையை அரைத்து புண்கள் மற்றும் கட்டிகளுக்கு போடா விரைவில் குணமடையும்.