மூலிகைகள்
பொடுதலை மருத்துவ பயன்கள்
பொடுதலை முழுத்தாவரமும் மருத்துவ பயனுடையது. இது தமிழகமெங்கும் குளம், ஆறு, வாய்க்கால் போன்ற இடங்களில் அதிகமாக காணப்படும். மிகச்சிறிய வெண்ணிற மலர்களை உடைய தரையோடு படரும் செடியினம்.
பொடுதலையின் பேருரைத்தாற் போராமப் போக்கு
மடுதலைச்செய் காசமு மடங்குங் – கடுகிவரு
பேதியோடு சூலைநோய் பேசரிய வெண்மேகம்
வாதமும்போ மெய்யுரக்கும் வாழ்த்து
குணம்
பொடுதலையால் சீதபேதி, இருமல், சூலைநோய், வாதநோய் இவைகள் போம் என்க. உடல் பொலிவை தரும்.
பயன்கள்
- பொடுதலை இலையை பறித்து ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/4 லிட்டராக காய்ச்சி ஒருவேளைக்கு 1 அவுன்ஸ் பெரியவர்களும் 2 தேக்கரண்டி குழந்தைகளுக்கும் அளவாக கொடுக்க பேதி அசீரணம் முதலியவை நீங்கும்.
- இதன் இலையை மிளகு, சீரகம், உப்பு சேர்த்து நெய்யில் வதக்கி உண்ண சீதபேதி, வயிற்று வலி, வயிற்று பொருமல் ஆகியவை குணமாகும்.
- பொடுதலை இலையுடன் சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெண்ணையில் கொடுக்க வெட்டை சூடு, வெள்ளை ஆகியவை குணமாகும்.
- பொடுதலை இலையுடன் உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி துவையல் செய்து மதிய உணவுடன் சாப்பிட்டு வர உள் மூலம், இரத்த மூலம் பவுத்திரம் தீரும்.
- இதன் இலைச்சாற்றில் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து வாரம் இருமுறை தலை முழுகி வரத் தலையின் தோல் நோய், பொடுகு முதலியவை தீரும்.
- பொடுதலையுடன் இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து துவையலாக்கி சோற்றில் நெய்யுடன் உண்ண மார்புச்சளி, சுவாச காசம் தீரும்.