வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கும் பிரண்டை
பிரண்டை சதை பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு கொடி. மடலான இலைகளை கொண்டிருக்கும். சிவப்பு நிற சிறிய கனியுடையது. மூங்கில் பிரண்டை, கோப்பிரண்டை என்ற இனமும் காணக்கிடைக்கிறது. தமிழகமெங்கும் தானே வளர்கிறது. தண்டு, வேர் ஆகியவை மருத்துவ பயனுடையது.
பிரண்டையின் மற்றோரு பெயர் ‘வச்சிரவல்லி’. இது இந்திரன் கையில் உள்ள வஜ்ராயுதம் போன்ற வலிமையை தரும். உடல் உறுதியை தரக்கூடியது இந்த பிரண்டை.பிரண்டையில் கால்சியம், கரோட்டின் மற்றும் வைட்டமின் ‘சி’ ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கும், கரோட்டின் தெளிவான பார்வைக்கும், வைட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்பு சக்திக்கும் இன்றியமையாதவை.
பிரண்டையைநெய் யால்வறுத்துப் பின்பரைத்தூமாதே
வெருண்டிடா தேற்று விழுங்கி-லரண்டுவரு
மூலத் தினவடங்கு மூல விரத்தமறும்
ஞாலத்து னுள்ளே நவில்.
பிரண்டையின் மருத்துவ பயன்கள்
- பிரண்டையை சிறு துண்டுகளை நறுக்கி அரை வேக்காடாக வேக வைத்து, உப்பிட்ட மோரில் போட்டு உலர்த்தி, பின் அதனை வற்றலாக பயன்படுத்திவர செரியாமை, அல்சர், புளியேப்பம் போன்ற வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
- பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கலை நீக்கும். குடல் புண்களை நீக்கி நல்ல பசி உண்டாகும்.குடற்பூச்சிகளை அழித்து, உடலுக்கு பலத்தை கொடுக்கும்.
- ரத்த மூலத்திற்கு பிரண்டை கைகண்ட மருந்தாகும்.இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.
- பிரண்டை, கற்றாழை வேர், நீர் முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சமஅளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள்மூலம் குணமாகும்.
- பிரண்டையை சிறு தீயில் இட்டு, வதக்கி சாறு பிழிந்து 20-30 மில்லி அளவு குடித்து வர முறையற்ற மாதவிலக்கு சீராகும்.
- பிரண்டை வேரை உலர்த்தி பொடி செய்து 1 கிராம் அளவாக காலை, மாலை கொடுத்து வர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.
பிரண்டை லேகியம்
பிரண்டையை நன்றாக இடித்து அரையுங்கள் அப்போது நார் நன்றாக வரும். அவற்றை எல்லாம் நீக்கி விட்டு அரைக்கவும். தொடர்ந்து அதில் 200 கிராம் அளவு எடுத்து கொண்டு, அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைக்கவும், பின்னர் 200 கிராம் அளவு பனை வெல்லத்தை பாகு போன்று காய்ச்சி அதில் அரைத்த கலவையை கலந்து 200 கிராம் நெய்விட்டு கிளறவும்.லேகிய பதம் வந்ததும் பத்திரப்படுத்துக் கொள்ளவும். இதை தினமும் இருவேளை 5 கிராம் அளவு உட்கொணடு வர அஜீரணம், பக்கவாதம், கை-கால் வலி, இருமல், சளி முதலிய கப நோய்கள் குணமாகும்.