மூலிகைகள்
பனங்கற்கண்டு மருத்துவ பயன்கள்
பனங்கற்கண்டு பதநீரை காய்ச்சி எடுக்கப்படுகிறது. இதை நாம் இப்போது பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரை (சீனி) பதிலாக பயன்படுத்தலாம். சித்தமருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இயற்கை கொடுத்த இந்த இனிப்பு பொருளை நாம் பயன்படுத்தி வந்தாலே நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறலாம்.
மேக வனலுமிக வீசும சூரிகையா
லாக முறுகனலு மாறுங்காண் – மேகனத்திற்
றங்கிவரு நீர்ச்சுறுக்குந் தாகவெப்ப முந்தணியு
மிங்குபனங் கற்கண்டுக் கே
குணம்
பனங்கற்கண்டுக்கு மேகசுரம், மசூரிகையின் வெப்பம், சிறுநீர் வருகையில் ஆண்குறி கடுத்தல், உஷ்ண தாகம் நீங்கும் என்க.
பயன்கள்
- பனங்கற்கண்டை காய்ச்சிய பசும்பாலில் போட்டு வடிகட்டி சாப்பிட நாவிற்கு நல்ல ருசியாக இருக்கும். காபி, தேயிலை பானங்களில் சாதாரணமாக சர்க்கரையை விட பனங்கற்கண்டையிட்டு உபயோகப்படுத்துவது சாலச்சிறந்தது.
- 12 கிராம் அளவுள்ள மிளகை நன்கு வறுத்து அதில் 4 கிராம் அளவு சீரகத்தை போட்டு அது வெடித்த சமயம் சிறிது தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி பால் விட்டு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நீர்கடுத்தல், நீர் எரிச்சல், உஷ்ணதாகம், மருந்துகளின் வேகம் இவைகள் நீங்கும்.
- பனங்கற்கண்டை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கிறது.
- பானக்கற்கண்டு வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை குணமாக்குகிறது. உடலை நல்ல பலத்துடன் வைக்கிறது.