தேனின் மருத்துவ பயன்கள்
தேன் ஆங்கிலத்தில் Mel என்று கூறப்படுகிறது. சித்த மருத்துவத்தில் தேனின் வகைகளை இப்படி சொல்லியிருக்கிறார்கள். கொம்புத்தேன், மலைத்தேன், புற்றுத்தேன், மரப்பொந்து தேன், மனைத்தேன், சிலர் பெட்டிகளிலும் வளர்ப்பது உண்டு.
தேனின் வகைகள்
கொம்புத்தேன்: திரி தோஷங்களையும் நீக்கும் ( வாதம்,பித்தம்,கபம்)
மலைத்தேன்: காசம், விக்கல், கண் நோய், சுரம், தேகக்கடுப்பு நீங்கும், பசி உண்டாகும்.
மனத்தேன்(வீடுகளில் கட்டுவது): கரப்பான் – புழு வெட்டு, கோபம், காசம் போகும் – பசியை உண்டு பண்ணும்.
புற்றுத்தேன்: இருமல் , சளி நீக்கும்.
நீண்ட நாட்கள் உள்ள தேனை பயன் படுத்தக்கூடாது. வாத ரோகத்தை உண்டு பண்ணும். வயிற்று எரிச்சலை உண்டாக்கும், மூலத்தையும் உண்டு பண்ணும், மருந்துகளின் குணங்களை கெடுக்கும்.
தேன் சக்தி மிக்க உணவு. தேன் நோய் தீர்க்கும் மருந்தாக மருத்துவத்துறையில் பெரிதும் பயன்படுகிறது. தேனீக்களில் ஆயிரத்திற்கு மேலான இனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இனத்தின் வாழ்வு முறையும் இயல்புகளும் வெவ்வேறாக இருந்தாலும் எல்லா இனங்களுமே தேனை உற்பத்தி செய்யும் முறையில் ஒத்திருக்கின்றன.
மலர்களிலுள்ள மகரந்தத் தேனை உறிஞ்சித் தன் இரைப்பையில் ( தேனீ ) சேகரித்து தங்கள் கூட்டிற்க்கு எடுத்து செல்கின்றன. இந்தப்பை தேனீயின் செரிமானப்பாதையில் இரைப்பைக்கு பக்கத்தில் ஒரு சிறு பிதுக்கமாக அமைந்து உள்ளது . பையில் இருக்கும் போது – வேதியல் மாற்றமடைந்து தேனாக மாறுகிறது. தூய்மையான தேன் இளம் மஞ்சள் நிறமும் பாகு போன்றும் இருக்கும்.
தேனின் பயன்கள்
தேனில் 70 வகையான உடலுக்கு ஏற்ற சத்துக்கள் உள்ளன. வைட்டமின்களும் தேனில் அடைங்கியுள்ளன. சித்த மருத்துவ நூல்களில் பித்தம் – வாந்தி – கபம் சம்பந்தமான நோய்கள் – வாயுத் தொல்லை – ரத்தத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
மருந்துகளை தேன் கலந்து கொடுப்பதால் ஜீரனப்பாதையில் வெகு விரைவில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. ரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை இருப்பதால் கடும் உழைப்பாளிகள் – விளையாட்டு வீரர்கள் இடை இடையே தேன் பருகினாலே உற்சாகமாக உதவுகிறது.
தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களைச் சீராக்கும். இதனால் இதய நோய் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது.
தேனுடன் இஞ்சி பேரிச்சம்பழம் ( விதை நீக்கியது ) இரண்டையும் ஊறவைத்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
குழந்தைகளுக்கு தினசரி காலையில் 5 மிலி அளவு தேன் கொடுத்து வர நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். சளி பிடிப்பது குறையும்.
சிலர் தேனை சூடு செய்து பயன் படுத்துவார்கள் அப்படி செய்து சாப்பிடுவது தவறு. தேனை சூடு செய்யும் போது தேனில் ஹைட்ராக்ச்சி மெதில் பார்ப்பாலடிஹைடு என்ற வேதிப்பொருள் வெளிப்படுகிறது. விஷத்தன்மை கொண்டது இது புற்று நோயை உண்டாக்கும்.
ஆனால் வெது வெதுப்பான வெந்நீரில் தேனை கலந்து சாப்பிடலாம். இதனால் பருத்த உடம்பு குறையும்.
பச்சைத்தண்ணீரில் தினசரி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் 3 மாதத்தில் நோஞ்சான் உடம்பு சற்று சதைப்பிடிப்பு உண்டாகும். நீர்த் தாரையில் உள்ள புண்களை ஆற்றும் வயிற்று வலியையும் தாகத்தையும் அடக்கும்.
கருங்சீரகம் கொஞ்சம் எடுத்து கசாயமாக வைத்து அதில் ஒரு தேக்கரண்டி தேனை கலக்கி குடிக்க கீழ்வாத நோய் போகும்.
வெள்ளைக் குங்குலியம் கல்லுப்பு இரண்டையும் சிறிதளவு தேன் விட்டு குழம்பு பதமாக அரைத்து காதில் சில துளி விட்டு பஞ்சு கொண்டு அடைத்து வைக்கக் காது வலி குணமாகும். காதில் சீழ் வருதல் குணமாகும்.
தேன் சிறிது நவச்சராம் கலந்து அரைத்து கட்டிகளுக்கு பற்று போட குணமாகும் தேன் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
நரம்பு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இரவு படுக்கச் செல்லும் முன் எலும்மிச்சம் ஒன்று பிழிந்து சாறுடன் ஒரு தம்ளர் தண்ணீருடன் இரண்டு கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட நோய் குணமாகும்.
ஆரஞ்சு பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட தூக்கம் நன்றாக வரும்.
பாலில் கோதுமை மாவை கலந்து காய்ச்சி பிறகு லேசான சூடு இருக்கும் போது சிறிது தேனை கலந்து சாப்பிடலாம். நோயாளிகளுக்கு இது ஆரோக்கியத்தை தரும்.
வேப்பிலைச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட தோல் நோய் குணமாகும்.தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட வாய்ப்புண்கள் குடல் புண் ஆறும்.
தக்காளிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலப்படும். கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட ரத்த சோகை குணமாகும்.