வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கும் ஏலக்காய்
சிறந்த நறுமணப் பொருளான ஏலக்காய், ஏராளமான மருத்துவ குணமும் கொண்டது. வெறும் மணத்திற்காக உணவு வகையில் இதனை சேர்க்கும் நாம் இதன் பல்வேறு மகத்துவங்களை அறிந்திருக்க மாட்டோம்.
தென்னிந்தியாவை தாயகமாகக் கொண்டது ஏலக்காய். ஏலக்காயின் செடி 4 மீட்டர் உயரம் வளரும். இதன் விதைகளே ஏலக்காய் என வழங்கப்படுகிறது. 1 முதல் 2 செ.மீ அளவில் ஏலக்காய் இருக்கும். பச்சை மற்றும் கருப்பு என 2 விதமான ஏலக்காய் இனம் உள்ளது.
விக்கல் பெருவாந்தி வெய்யவழல் நீர்ப்பேதி
மிக்கவெழும் பித்தம் மிகுமயக்கம் சிக்கலுற்ற
மந்தம் வயிற்றுவலி மாதே விரைந்தோடும்
அந்தமுறு மாஞ்சிக் கறி.
ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
தாவரங்களில் மட்டுமே காணப்படக்கூடிய துணை ரசாயன மூலக்கூறுகள், நோய் எதிர்ப்பு பொருட்கள், ஆரோக்கியத்தை அதிகரிக்கும் சத்துக்கள் ஏலக்காயில் உண்டு.
100 கிராம் ஏலக்காய் விதையில் 13.97 மில்லிகிராம் இரும்புசத்து உள்ளது. இது ரத்த சிவப்பணு உற்பத்திக்கும், செல்வளர்ச்ச்சிதை மாற்ற செயலுக்கும் அவசியமாகும்.
5 ஏலக்காயை நசுக்கி 200 மி லி பாலில் போட்டு அத்துடன் 200 மி லி நீர் சேர்த்து நீரை சுண்டக் காய்ச்சிச் சர்க்கரைகலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிடப் பித்த மயக்கம் தீரும்.
ஏலரிசி, சீரகம், சுக்கு, கிராம்பு சமனெடையாகப் பொடித்து 2 கிராம் அளவாகத் தேனில் நாளென்றுக்கு 3 வேலையாகச்சாப்பிட்டு வர வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல், செரியாமை ஆகியவை குணமாகும்.