உடல் தேய்மானங்களின்றி நீண்ட நாள் வாழ
நாம் அன்றாடம் நடப்பதாலும், பலவித வேலைகளை செய்வதாலும், மனதை குழப்பிக்கொண்டு பலவற்றை சிந்திப்பதாலும் நம் உடலில் இருக்கும் எலும்பு மூட்டுகள், பாதங்களின் தசைகள் பற்கள் முதலிய பல உள்ளுறுப்புகளும் தேய்மானம் அடைகின்றன.
ஆனால் இந்த தேய்மானங்கள் புதுப்பிக்கப்பட நாம் தூங்கும் போது நம் உடம்பின் ஒரு பகுதியிலிருந்து ஒரு விதக் கலவை வந்து தேய்ந்த பக்கங்களில் படிகின்றன. சில மணி நேரங்களில் படிந்த திரவம் இறுகி தேய்ந்த பாகங்கள் புதுப்பிக்கப்பட்டு விடுகின்றன.
உணவில் அறுசுவை
நம் உணவில் அறுசுவையில் கசப்பை தவிர்த்து மீதமுள்ளவற்றை நாம் தினமும் சாப்பிட்டு வருகிறோம் அல்லவா? இதனால் தேய்மானங்களை புதுப்பிக்க உற்பத்தியாகும் கலவை தரமற்றதாக உற்பத்தியாகின்றது.
இந்த தரக்குறைவு கலவை தேய்ந்த பாகங்களில் முழுமையாகவும், உறுதியாகவும் படியாமல் போய்விடுகின்றபடியால், படிப்படியாகத் தேய்மானங்கள் நம் உடலில் அதிகமாகி உடல் உறுப்புகள் அதன் பலத்தை இழக்க வாய்ப்புண்டாகி விடுவதால் தளர்ச்சியடைகிறோம்.
எனவே உணவில் கசப்பு சுவை இல்லாததால் மனித உடலில் ஆறில் ஒரு பங்கு தேய்மானம் தினந்தோறும் புதுப்பிக்கப்படாமல் தொடர் தேய்மானத்தால் முதுமை அடைய வழி ஏற்படுகிறது. மீதமுள்ள ஆறில் ஐந்து பங்கு தேய்மானமும் முழு சக்தியற்ற கலவையினால் புதுப்பிக்கப்படுவதால் இம்மாதிரி உடல் உறுப்புகள் விரைவாகவும் அதிகமாகவும் தேய்மானம் அடைந்து விடுகிறது.
ஆகவே இறுதிவரை மனித உடம்பு தளர்ச்சியடையாமல் முழுசக்தியுடன் தன்னிச்சையாக சுதந்திரமாக வாழும் விலங்கினங்கள் பறவையினங்கள் போல மடியும் வரை நோயின்றி வாழவேண்டுமானால் தினமும் ஒருவேளை உணவிலாவது ‘கசப்பு’ சுவைக்குரிய காய்கறி கீரை வகைகளை உணவுடன் சேர்த்து மென்று சுவைத்து விழுங்கி வரவேண்டும். அகத்திக்கீரை, பாகற்காய், சுண்டக்காய் ஆகியவை கசப்புக்குரிய முக்கியமானவை.