மூலிகைகள்
எண்ணெய் பசை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கும் உசிலை
சமமான இரட்டை சிறகமைப்பை கூட்டிலைகளையும், கற்றையான மகரந்த தாள்களை உடைய பூக்களையும், தட்டையான காய்களையும் நல்ல உறுதியான கட்டைகளை கொண்ட மரம். தமிழகமெங்கும் வறண்ட காடுகளில் வளர்கிறது. இதன் இலை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவ பயனுடையது.
அள்ளுமந்த நெய்ச்சிக் கழன்மேக நீங்கு நிதின்
கொள்ளுதயி லக்கறைக்கு கொள்விறகாம் – விள்ளுமதி
லோதியடை வானினமென் றென்றுகுழ லேகலிகை
யாதி யடைபிசின்கட் டை
குணம்
உசிலமரத்தின் வேர்ப்பட்டை அள்ளு மாந்தத்தையும் இலையின் தூள் எண்ணெய் சிக்கயும். பிசின் பித்த மேகத்தையும் நீக்கும். கட்டை தினமும் குடிக்கின்ற எண்ணெய் காய்ச்சுவதற்கு விறகாகும்.
- உசிலை இலைப்பொடியை எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாட்களில் உடலில் தேய்த்து குளித்து வந்தால் எண்ணெய்ப்பசை நீங்கும் உடல் நல்ல குளிர்ச்சி பெறும்.
- உசிலம்பட்டை, வெங்காயம், தீயில் சுட்ட வசம்பு ஆகிய மூன்றிலும் வகைக்கு 10 கிராம் எடுத்து சிதைத்து 1/2 லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி யாக காய்ச்சி வடிகட்டி 1,2 தேக்கரண்டி ஒரு நாளைக்கு மூன்று வேளை குழந்தைகளுக்கு கொடுக்க அள்ளு மாந்தம், சுழிக் கணம் ஆகியவை குணமாகும்.
- உசிலையின் பிசின் பித்தத்திற்கு செய்யப்படும் லேகியங்களில் சேர்க்கப்படுகிறது.
- குளிர்ச்சியான எண்ணெய் காய்ச்சுவதற்கு உசிலமரக்கட்டை கொண்டு எரித்தல் மிகவும் சிறந்தது.