அனைத்து விதமான காய்ச்சலையும் குணப்படுத்தும் நிலவேம்பு
மிகவும் கசப்புடைய நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவிலமைந்த தண்டுகளையும் உடைய சிறு செடி. தமிழ்நாட்டில் சம வெளிப்பகுதிகளில் தானே வளர்கிறது. செடி முழுமையும் மருத்துவ பயனுடையது.
வாதசுரம் நீரேற்றம் மாற்றுஞ் சுரதோட
காதமென ஓடக்கடிவுங்காண் மாதரசே
பித்தமயக்கறுக்கும் பின்புதெளிவைக்கொடுக்கும்
சுத்தநிலவேம்பின் தொழில்
குணம்
காய்ச்சல் அகற்றுதல் பசிஉண்டாக்குதல் தாது பலப் படுத்துதல் முறை நோய் தீர்த்தல் ஆகிய பண்புகளை உடையது.
நிலவேம்பு மருத்துவ பயன்கள்
நிலவேம்பு கண்டங்கத்தரி வேர் வகைக்கு கைப்பிடி அளவு, அதனுடன் சுக்கு 10 கிராம் சேர்த்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி ஒரு நாளைக்கு 3 வேளை குடிக்க மலேரியா குணமடையும்.
காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில் கொடி வகைக்கு 10 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி 30 மி.லி வீதம் கொடுத்து வரக் குழந்தைகளுக்கு காணும் அனைத்து காய்ச்சலும் தீரும்.
நிலவேம்பு இலையில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலையில் மட்டும் 2 வாரத்திற்கு குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கிற்குப் பின்னர் ஏற்படும் அசதி தீரும்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்நிலை ஆய்வுகளில் இருந்து நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், டைபாய்டு எதிர்ப்பு சக்தியும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.