அகத்திக்கீரை மருத்துவ பயன்கள்
அகத்திக் கீரையின் ஆங்கிலப் பெயர் ‘Agati Grandiflora Leaves’
இது சீமை அகத்தி – சிற்றகத்தி – சாழை அகத்தி – முனி – கரீரம் – அச்சம் என்று பலவாறு அழைக்கப் படுகிறது.
மரம் போல் உயரமாக வளரக் கூடியது. எனினும் இது செடி வகையைச் சேர்ந்தது. வெற்றிலைக் கொடியை படர வைக்க நட்டு இருப்பார்கள். தை – மாசியில் பூ பூக்கும். பூக்கள் வெண்மை நிறமாய் இருக்கும். சிகப்பு நிறமாகவும் பூக்கும். பூ வேர் – பட்டை ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தது.குளிர்ச்சி தன்மை உள்ளது.
அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்திக் கீரையை யாரும் எளிதில் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை, ஏனென்றால் அதில் கசப்புத் தன்மை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. சுவை கசப்பாக இருந்தாலும் இதன் மருத்துவ நன்மைகளை பார்த்தால், இதனை பிடிக்காதவர்களுக்கு கூட வியப்பாகத்தான் இருக்கும்.
அகத்தி மரத்தின் பட்டையை இடித்து தண்ணீரில் கலந்து காய்ச்சி குடிக்க விஷக் காய்ச்சல் போய்விடும்.
வேற்பட்டை – ஊமத்தை வேர் இரண்டையும் அரைத்து பற்றுப் போட மூட்டுவலி – மூட்டு வீக்கம் குணமாகும்
நாட்டு மருந்துகள் சாப்பிடும் பொழுது இதனை சாப்பிடக் கூடாது. மருந்துகளின் வீரியத்தை குறைத்து விடும்.
இதன் இலை சாறு செந்தூரங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
இலையை இடித்து சாறு பிழிந்து தேவையான – அளவு நல்லெண்ணெய்யுடன் கலந்து எரித்து சாறு சுண்டும் பொழுது பளிங்கு சாம்பிராணி – கஸ்தூரி மஞ்சள் – கிச்சிலிக் கிழங்கு – விளாமிச் சம்வேர் ஆகியவைகளை இடித்து போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கில் நீர் வடிதல் – பித்தத் தலைவலி குணமாகும்.
இதன் இலைச் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து – நீர்க்கோர் வை பிடித்துள்ள குழந்தகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும். காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறும்.
இலைளை உலர்த்தி பொடி செய்து காலை – மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அளவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீரடைப்பு – பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.
அகத்திகீரையை தொடர்ந்து 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பித்தம் அகலும். பார்வை தெளிவாகும்.