மூலிகைகள்
உடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேயிலை
தேனீரை உற்சாக பானமாக உலகமுழுவதும் பயன்படுத்தப்படுகிறது. தேயிலை இலைகளை உலரவைத்து, பிறகு பொடி செய்து தேனீர் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாக கருதினர். இந்தியா உலகில் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடாக விளங்குகிறது.
ஊக்கமிக வாகும் உடம்பின் நரம்பிறுகும்
தூக்கமது தோன்றாதே தோகைநல்லாய் – ஏக்கமுறச்
செய்திடுமே பிற்பலந்தான் சேர்ப்பித்த குன்மவகை
கொய்த நற் றேயிலையாற் கூறு
குணம்
உலர்ந்த தேயிலை மனத்திற்கு உற்சாகம், நரம்புகளுக்கு பலம் கொடுக்கும். அதிகமாக அருந்தும் போது பித்தத்தையும், குடற் புண்ணையும் உண்டாக்கும். நித்திரை பங்கம் உண்டாகும்.
நன்மைகள்
- தேனீரை காலையில் அருந்தினால் நல்ல உற்சாகத்தை கொடுக்கும். தேனீரை காலையில் அருந்துவதே சிறந்ததாகும்.
- தேனீரால் அதிக உழைப்பினால் ஏற்பட்ட நரம்புகளின் தளர்ச்சி போகும்.
- தேயிலை கொண்டு சொறி, சிரங்குகளை கழுவி வர விரைவில் குணமடையும்.
- தேயிலை பொடியுடன் பால் சேர்க்காமல் சுக்கு தூள் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல உற்சாகத்தை கொடுக்கும்.
- தேயிலை பொடியுடன் எலுமிச்சை சாறுகலந்து பானமாக செய்து சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.
தீமைகள்
- காபி பானத்தை விட தேயிலை பானத்திற்கு தீய குணம் குறைவு என்று சித்தமருத்துவத்தில் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள்.
- இத்தேயிலை பானத்தை அடிக்கடி உபயோகித்தால் குடல் புண், வாயுவை உண்டாகும்.