மூலிகைகள்
மருதோன்றி (மருதாணி) மருத்துவ பயன்கள்
மருதோன்றி ஈட்டி வடிவிலான எதிரடுக்கில் அமைந்த இலைகளையும் மணமுள்ள வெள்ளை நிற மலர்களையும் உடைய குறுஞ்செடி. இதுதான் மருதாணி என்று அழைக்கப்படுகிறது. இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவ பயனுடையது.
சொல்லுநகக் கண்களிலே சுற்றிவரும் புண்ணரிப்புக்
கொல்லும் மதுமேகங் கொம்மைமுலை – மெல்லியர்க்குக்
காணும் பெரும்பாடு கட்டழிக்கும் வெட்டையெல்லாம்
நா ணுமரு தோன்றிக்கு நாடு.
குணம்
மருதோன்றி இலையால் நகக்கண்களிலே சுற்றி அரிப்புடன் வரும் நோய்கள் நீரும், மதுமேகம்(சர்க்கரை), பெரும்பாடு, வெட்டை ஆகியவை தீரும்.
பயன்கள்
- மருதாணி இலையை நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்கையளவு பசுவின் பாலில் கரைத்து 2-3 தடவை வடிகட்டி தினம் ஒரு வேளை 3 நாட்களுக்கு காலை நேரத்தில் சாப்பிட்டு பால் சோறு மட்டும் அருந்திவர வெள்ளை, பெரும்பாடு, அதிக சிறுநீர் போதல் ஆகியவை நீங்கும்.
- மருதாணி இலையை சுத்த நீர்விட்டு அரைத்து மேகவாயுப்பிடிப்புகளுக்கு பற்று போட குணமாகும்.
- மருதோன்றி இலையை தண்ணீரில் வேகவைத்து வடித்து வாய்கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.
- மருதாணி இலையை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி வடித்து கூந்தலுக்கு தேய்த்து வர தலைமுடி செழிப்பாக வளரும்.
- மருதோன்றி பூவை படுக்கையறையில் வைத்திருந்தால் நன்றாக தூக்கம் வரும்.
- உள்ளங்கால் எரிச்சலுக்கு மருதாணியை அரைத்து எலுமிச்சை சாறுடன் கலந்து தடவி வர குணமாகும்.
- இறுக்கமான ஆடை அணிவதால் இடுப்பில் காணப்படும் கருமை நிறத்திற்கு மருதோன்றி இலையுடன் மஞ்சள், அருகம்புல் சேர்த்து அரைத்து பூசி வர குணமாகும்.
- கருந்தேமலுக்கு மருதாணி இலையுடன் சிறிதளவு குப்பைமேனி, வெப்பன்கொழுந்து, மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வர கருந்தேமல் மறையும்.
- காலில் ஆணி உள்ளவர்களுக்கு மருதோன்றியின் வேர் பட்டையை அரைத்து கட்ட குணமாகும்.