மூலிகைகள்
தோல்நோய்களை நீக்கும் பூவரசு
நீண்ட கம்பு கொண்ட இதய வடிவ தனியிலைகளையும் மஞ்சள் நிற மலர்களையும் உடைய உறுதியான என்றும் பசுமையான பெரிய மரம். இதன் இலை, பழுப்பு, காய், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையது.
நூறாண்டு சென்றதொரு நுண்பூ வரசம்வேர்
தூரண்ட குஷ்டைத்தொ லைக்குங்காண்- வீறிப்
பழுத்த விலைவிதைப்பூ பட்டையிவை கண்டாற்
புழுத்தபுண்வி ரேசனமும் போம்.
நோய் தணித்து உடல் தேற்றவும் நாடி நடையை மிகுத்து உடல் வெப்பு அதிகரிக்கவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யவும் பயன்படும்.
மருத்துவ பயன்கள்
- பழுப்பை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போட சொறி சிரங்கு, கரப்பான், ஊரல், அரிப்பு குணமாகும்.
- இலைகளை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.
- பூவரசு காயின் சாற்றைத் தடவிவரப் படர் தாமரை குணமடையும்.
- 100 ஆண்டுகள் சென்ற மரத்தின் காய், பூ, பட்டை ஆகியவற்றைச் சமனளவு பொடித்துக் காலை, மாலை 1 தேக்கரண்டி நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் வியாதிகள் அனைத்தும் தீரும்.
- 200 கிராம் பட்டையை 1 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை குடித்து வரக் காணாக்கடி விஷம், மகோதரம், பாண்டு, வயிறு வீக்கம் குணமாகும்.