வாத நோய், மலச்சிக்கலை குணமாக்கும் ஆமணக்கு
கைவடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்றுவிதைகளைக் கொண்ட வெடிக்கக்கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டைமுத்து எனப்பெறும். இலை எண்ணெய் ஆகியவை மருத்துவப்பயனுடையவை.இலை வீக்கம் கட்டி ஆகியற்றை கறைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் மலமிளக்கும், தாது வெப்பு அகற்றும்.இதன் விதையில் இருந்து எடுக்கப்படுவது தான் விளக்கெண்ணெய்.
மிக்கவெழுங் காமாலை மின்சுமூ லக்கடுப்பும்
துக்கமிகு முந்திவலித் தொல்லைப்போம் மக்கட்கு
நாமணக்கப் பாலூட்டும் நாரியார்க்குப் பால்சுரக்கும்
ஆமணக்கின் சீறிலையா லாம்
மருத்துவ பயன்கள்
இலையை நெய்தடவி அணலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டிவர பால் சுரப்பு மிகும்.
இலையை பொடியாய் அறிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டிவர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும்.
ஆமணக்கு துளிரை விளக்கெண்ணெயில் வதக்கிக் தொப்புளில் வைத்துக்கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.
ஆமணக்கு வேரை இடித்து தேன் கலந்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவில் ஊறவைத்து, காலையில் அதனை வடிகட்டிகுடித்து வர, தேவையற்ற ஊளைச்சதை குறைந்து உடல் மெலியும்.
குளிர்காலத்தில் காலில் ஏற்படுகின்ற வெடிப்புக்கு விளக்கெண்ணையை சிறிது சூடாக்கி மஞ்சள் பொடி, சேர்த்து தடவிஊறவைத்து கழுவி வர சில நாட்களில் குணமாகும்.
மலச்சிக்கலுடன் வயிற்றுவலி இருந்தாலும், மாதவிடாய் சரிவர வெளிப்படாமல் வயிற்றுவலி இருந்தாலும் அடிவயிற்றில் ஆமணக்கு எண்ணெயைத் தடவி அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர அந்த வலி தீரும்.