வயிற்றுப்பூச்சிகளை போக்கும் சுண்டைக்காய்
அகன்ற சிறகாக உடைந்த இலைகளையும், வெண்ணிறப் பூங்கொத்துக்களையும், கொத்தான உருண்டை வடிவாக காய்களையும் உடைய முள்ளுள்ள சிறுசெடி. இது தமிழகமெங்கும் கிடைக்கக்கூடியது. காய் கொஞ்சம் கசப்பு தன்மை உடையது. இதன் காயே அதிக மருத்துவ குணமுடையது.
நெஞ்சின் கபம்போ நிறைகிருமி நோயும்போ
விஞ்சு வாதத்தின் வியைவும்போம் – வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கு மாமலையி லுள்ளசுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்
குணம்
கசப்பு சுவையுடைய சுண்டைக்காயால் மார்புசளி, கிருமிரோகம், வாதாதிக்கம் ஆகிய இவைகள் இவைகள் போம்.
சுண்டக்காய் மருத்துவ பயன்கள்
கோழையகற்றியாகவும் வயிற்றுப்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும். பால் சுண்டைக் காயைச்சமைத்து உண்ண கபக்கட்டு, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, வயிற்றுப்பூச்சி முதலியன தீரும்.
உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, காயவைத்து எண்ணையில் வறுத்து இரவு உணவில் பயன்படுத்தி வர மார்ச்சளி, ஆஸ்துமா, காசநோய் தீரும். வயிற்றுப்போக்கும் நின்றுவிடும்.
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம், வறுத்து இடித்த சூரணம் காலை, மாலை 2 சிட்டிகை மோரில் சாப்பிட்டு வர பேதி, மூலம், பசியின்மை, மார்பு சளி முதலிய நோய்கள் தீரும்.
சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள் மூலம் ஆகியவை தீரும்.