புத்துணர்வு அளிக்கும் அவுரி மூலிகையின் பயன்கள்
அவுரி (நீலி)
கரும்பச்சை இலைகளையுடைய சிறுசெடியினம். நீலநிறச்சாறு உடையது. இதனால் நீலி எனவும் பெயர் பெரும். எல்லா பாசனங்களையும் சுத்தி செய்ய வல்லது. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
வேர் நஞ்சுமுறிக்கும் மருந்தாகவும்; இலை வீக்கம், கட்டி முதலியவற்றை கரைக்கவும் நஞ்சு முறிக்கவும் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் மலமிளக்கியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படும்.
மருத்துவ பயன்கள்
அவுரி இலையைக் கொட்டைப்பாக்கு அளவு அரைத்து 250 மி லி வெள்ளாட்டுப்பாலில் கலக்கி வடிகட்டி அதிகாலையில் மூன்று நாள் கொடுக்க மஞ்சள் காமாலை அந்திமாலை குணமாகும்.
அவுரிவேர் 20 கிராம், அறுகம்புல் 30 கிராம், மிளகு 3 கிராம் மையாய் அரைத்து புன்னைக்காய் அளவு காலை, மாலை சாப்பிட்டு இச்சா பத்தியம் இருக்க மருந்து வேகம் அனைத்தும் தீரும்.இம்மருந்தை நாள் தோறும் 3 வேளை உப்பு, புளி நீக்கிச் சாப்பிடப் பாம்பு, தேள், பூரான், செய்யான் ஆகியவற்றின் நஞ்சு நீங்கும்.
வேர் 20 கிராம் பெருநெருஞ்சில் இலை 50 கிராம் அரைத்து எலுமிச்சை அளவு மோரில் கொடுக்க வெள்ளை தீரும்.
அவுரி இலை, வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு சமன் சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து (அவுரி மாத்திரை) ஒரு நாளைக்கு 3 வேலையாகக் கொடுத்துவர நரம்புச் சிலந்தி, ஓடு வாயக்கட்டிகள், கீல்வாதம் ஆகியவை தீரும்.
அவுரி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி, கொட்டைக்கரந்தை, மஞ்சள் கரிசலாங்கண்ணி செருப்படை ஆகியவற்றின் இலைகளை சமஅளவாக இடித்துப் பொடி செய்து (அவுரி கற்பம்) ஒரு தேக்கரண்டி தேனில் காலை, மாலை நாள்தோறும் 45 நாள்கள் சாப்பிட்டு வர பெண்களுக்கான உதிரக் கட்டு நீங்கும். வயிற்றுப்பூச்சிகள், பாம்பு, நஞ்சு, மூட்டுவாதம் முதலியவை தீர்ந்து உடல் பொன்னிறமாகும். புகை, புளி, போகம் தவிர்க்க வேண்டும்.