மிளகின் மருத்துவ பயன்கள்
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்னும் பழமொழி மிளகின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது. இதன் மூலம் நஞ்சாய் இருப்பினும் அதனை முறிக்கும் ஆற்றல் உடையது மிளகு என்பதை அறிய முடிகிறது.
தமிழ் இலக்கியத்தில் உள்ள திரிகடுகத்தில், மிளகு இரண்டாவது இடத்தை வகிக்கிறது
மிளகு ஓர் சிறந்த மூலிகை மருந்து என இப்போது தான் மேல்நாட்டு ஆய்வாளர்களும், மருத்துவர்களும் அறிந்து வருகிறார்கள். செரிமானம், தும்மல், சளி, கபம், பொடுகு, பல்வலி என உடல் முழுவதிலும் ஏற்படும் பலவகையான உடல்நல பிரச்சனைக்கு தீர்வளிக்கக் கூடியது
மிளகின் மருத்துவ குணங்கள்
மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம்பூ ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மை போல் அரைத்து மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்திக் கொள்ளவும். இதில் ஒரு மாத்திரை வீதம் இரு வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி, கபம் ஆகியவை குணமாகும்.
மிளகு, வெள்ளம், பசுநெய் ஆகிய மூன்றையும் சேர்த்து லேகியமாக கிளறி நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வர தொண்டைப்புண் குணமாகும்.
வேண்டிய அளவு மிளகை புளித்த மோரில் ஊற வைத்து உலர்த்தி இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து அரை கிராம் தேனில் குழைத்துக் காலை, மாலை கொடுத்து வர வாயு, கபம், இருமல், செரியாமை, மிகு ஏப்பம் ஆகியவை நீங்கிப் பசி எடுக்கும்.
3 கிராம் மிளகை பொடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 125 மி.லி யாகக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வரக் காய்ச்சல், செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும். மருந்து வீறு தணியும்.
மிளகு 4 கிராம் பெருங்காயம் 1 கிராம், கழற்சி பருப்பு 10 கிராம் இவற்றைப் பொடித்து தேனில் அரைத்து 200 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கி வயதுக்கு ஏற்ப 1 அல்லது 2 மாத்திரை காலை மாலை கொடுக்கக் காய்ச்சல், குளிர்க் காய்ச்சல், யானைக் கால் காய்ச்சல் ஆகியவை தீரும்.
ஒன்பது குப்பைமேனி இலையுடன் 5 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலை குடிக்கவும். இதனை 3 நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.
மிளகுடன் நொச்சி இலையை சேர்த்து கசாயமிட்டு குடித்து வர, மலேரியா சுரம் குணமாகும். இந்த கசயத்தால் வயிற்று வலி, உப்புசம், நாக்குப்பூச்சி, ஆகியவைகளும் குணமாகும்.
தொண்டைக்கட்டு, பல் வலி போன்றப் பிரச்சனை அதிகமாக இருந்தால், மிளகுத்தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு வாய்க் கொப்பளித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.
முகப்பரு மறைய
மிளகு, சந்தனம், ஜாதிக்காய் இவை மூன்றையும் நன்கு அரைத்து முகப்பருவின் மீது பூசி, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர முகப்பரு மறையும்.