மூலிகைகள்
பலாப்பழத்தின் நன்மை, தீமைகள்
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் நினைத்தாலே சாப்பிடத் தோன்றக்கூடிய சுவை உடையது. பலாப்பழத்தின் சுவை மேலும் மேலும் சாப்பிடத் தூண்டும். பலாப்பழத்தில் சில மருத்துவ நன்மைகள் இருந்தாலும் அதிகமாக சாப்பிடும்பொழுது இதனால் ஏற்படும் தீமைகள் அதிகம்.
தித்திக்கும் வாத சிலேஷ்மபித்த முண்டாக்கு
மெத்தக் கரப்பான் விளைவிக்குஞ் – சாத்தியமாயச்
சேராப் பிணியையெலாஞ் சேர்பிக்கு மோர்நொடியிற்
பாராய்ப் பலாவின் பழம்
குணம்
இனிப்புள்ள பலாப்பழம் வாத, கபபித்த நோய்களையும், கரப்பானையும் முன்பில்லாத பிணிகளையும் உண்டாக்கும் என்க
நன்மைகள்
- பலாப் பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டு வர மூளை நரம்புகள் வலுப்பெறும். வாத நோய் போன்றவை குணமாகும்.
- பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூசி வர குணமாகும்.
- இது உடல் உஷ்ணத்தை குறைத்து, பித்த மயக்கம், ஆகியவற்றை குணமாக்கும்.
பலாப்பழத்தை ஏன் அதிகமாக சாப்பிடக்கூடாது
- இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.
- பலா பிஞ்சினை அதிகமாய் உண்பதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படுவதுடன் சொறி, சிரங்கு, கரப்பான், இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.
- குடல் வால் சுழற்சி எனப்படும் “அப்பன்டிசைடிஸ்” உள்ளவர்கள் பலாப் பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.