இயற்கை பற்பொடி
இயற்கை பற்பொடி ஒளிவிடும் பல்வரிசைக்கு இனிமையான புன்னகைக்கு வித்திடுகிறது. இளமையில் ஒவ்வொருவருக்கும் பல் முளைக்கும்போது பளிச்சென்ற வெண்மையுடனே பற்கள் முளைக்கின்றன. நாம் பல்லை பாதுகாப்பதைப் பொறுத்தே அவை வெண்மையாகவோ, பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாகவோ ஆகிவிடுகின்றன.
உணவினைக் கடித்து, மென்று, சுவைத்து உண்ணவும், மோகனப்புன்னகை பூக்கவும் செய்வது பற்கள்தான். எனவே உடலின் இன்றியமையாத மிக முக்கிய பகுதி பற்கள். மேலும் நாம் தெளிவாகப் பேச பற்களின் உதவி தேவைப்படுகிறது.
நாம் பற்களை பராமரிக்காமல் விடும்போது பல் சொத்தை, ஈறு வீக்கம், ரத்தக்கசிவு, வாய்நாற்றம், பற்களில் காரை படிதல், பயோரியா போன்ற பல் சிதைவு நோய்கள் உண்டாகின்றன.
பல்லுக்கு பாதுபாப்புத் தருபவைகளில் காலங்காலமாக ஆல், வேல், நாயுருவி, வேம்பு, கடுக்காய் போன்ற மூலிகைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. தற்போது கணக்கிலடங்கா பற்பசைகள் புழக்கத்தில் உள்ளன. இவைகளெல்லாம் பற்களுக்கு புதிய தூய்மையான உணர்வை மட்டுமே ஊட்டுகின்றன.
ஆனால் பற்கள் தூய்மை செய்யப்படுவதில்லை. பற்கள் பளிச்சென்றிருக்கவும் பற்கள் நீண்டநாள் உறுதியோடு இருக்கவும் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பற்பசை, பற்பொடி, உணவுமுறை மற்றும் பராமரிப்பு முறைகளில் கவனம் செலுத்தவேண்டும்.பற்பசைகளைவிட இயற்கை மூலிகை கலந்த பற்பொடிகளே சிறந்தவை. பற்கள் பளிச்சிட இயற்கை பற்பொடி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
வேலம்பட்டை பற்பொடி தயாரிப்பு முறை
- பிஞ்சுக்கடுக்காய் – 35 கிராம்
- மாசிக்காய் – 35 கிராம்
- படிகாரம் – 35 கிராம்
- காசுக்கட்டி – 35 கிராம்
- சாதிக்காய் – 10 கிராம்
- மகிழம்பட்டை – 70 கிராம்
- வறுத்த உப்பு – 70 கிராம்
- கருவேலம்பட்டை – 250 கிராம்
இவைகளை தனித்தனியே இடித்து பொடி செய்து கொண்டு ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த பற்பொடியை கொண்டு பல் துலக்கி வர பல்வலி, இரதம் வருதல், வாய் நாற்றம், பல் கூச்சம் ஆகியவை நீங்கும்.