மூலிகைகள்
ஆலமரத்தின் மருத்துவ பயன்கள்
மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளில் இருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தை தாங்கும். அமைப்புடையது. நிழல் தரும் மரமாகத் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது.
சாறு பால் வடிவாக இருக்கும். இதன் இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவ பயனுடையது.
சொல்லுகின்ற மேகத்தை துஷ்ட வகக்கடுப்பை
கொல்லுகின்ற நீரிழிவை கொல் லுங்கா – ணல்லா
பாலும் விழுதும் பழமும் விதை யும்பூவும்
மேலு மிலையுமென விள்
குணம்
ஆலமரத்தின் பால், விழுது, பழம், விதை, பூ, பட்டை, இலை இவைகளால் பிரமேகம், வயிற்றுக்கடுப்பு, மேக நீர் இவைகள் நீங்கும்.
மருத்துவ பயன்கள்
- ஆலம் விழுதை கொண்டு பல் தேய்த்து வர பற்கள் உறுதிப்படும்.
- இதன் துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்கு தயிரில் கலந்து கொடுத்து வர இரத்த பேதி நிற்கும்.
- ஆலம் விழுது துளிரையும் விதையும் அரைத்து 5 கிராம் அளவுக்கு காலையில் மட்டும் பாலில் கலந்து கொடுத்து வர தாய்ப்பால் பெருகும்.
- ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு எடுத்து அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாட்களில் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
- ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் சிதைத்து 4 லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி காலையில் மட்டும் ஒரு குவளை குடித்து வர மது மேகம் தீரும். 4 நாட்களுக்கு ஒரு முறை தயாரித்து கொள்ளலாம். 1 முதல் 4 மண்டலம் வரை சாப்பிடலாம்.
- ஆலம் பட்டை, அத்திப்பட்டை, அவுரிவேர்பட்டை வகைக்கு 40 கிராம் அளவு எடுத்து அதனுடன் 10 கிராம் மிளகு சேர்த்து 8 லிட்டர் நீரில் போட்டு 2 லிட்டராக காய்ச்சி வேளைக்கு 250 மி.லி வீதம் தினம் 3 வேளை குடித்து வர ரச பாஷாணங்களின் வேகம் குறையும்.
- ஆலம் பாலை காலை, மாலை தடவி வர வாய் புண், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் ஆகியவை தீரும்.
- ஆலம் வேர்ப்பட்டை, மரப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் சிதைத்து போட்டு அரை லிட்டராக காய்ச்சி காலை, மாலையாக ஒவ்வொரு நாளும் குடித்து வர மேக எரிச்சல், மேகப்புண், மேக ஒழுக்கம் தீரும்.