மூலிகைகள்
மண்டைக்குத்தல், தலைபாரம், தலை நீரேற்றம் போக்கும் கருஞ்செம்பை (சித்தகத்தி)
கருஞ்செம்பை நீண்ட மெல்லிய தட்டையான காய்களையும் உடைய மென்மையான சிறுமரம். தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது. சித்தகத்தி, சிற்றகத்தி என்றும் பெயர் பெறும். இலை, பூ ஆகியவை மருத்துவ பயனுடையது.
குணம்
இதன் இலை வீக்கம் கட்டி ஆகியவற்றை கரைக்கவும். பூ வயிற்று பூச்சி கொல்லியாகவும் தாய்ப்பால் குறைக்கும் மருந்தாக நாடி நடையும் மிகுக்க கூடியதாகவும் பயன்படும்.
விப்புருதிப் புண்ணாறும் வீறுகரப் பானும்போந்
தப்பாமன் மேகந் தணியுங்காண் – வெப்பார்
கபரோக மேகுங் கருஞ்செம்பை யொன்றுக்
கிபமா முலைமாதே யெண்
மருத்துவ பயன்கள்
- கருஞ்செம்பை இலைச்சாறு, வெள்ளுள்ளிச்சாறு வகைக்கு அரைலிட்டர் நல்லெண்ணெய் ஒரு லிட்டர் கலந்து மிளகு, சீரகம், கருஞ்சீரகம், சாம்பிராணி ஒவ்வொன்றிலும் 5 கிராம் அளவு பசும்பாலில் மென்மையாக அரைத்து கலந்து சிறுதீயில் எரித்து பதமுறைக் காய்ச்சி வடித்து வாரம் ஒரு முறை தலையில் இட்டு குளித்து வர மண்டைக்குத்தல், தலைபாரம், தலைநீரேற்றம், காது மந்தம் ஆகியவை தீரும். இதுவே கருஞ்செம்பை தைலம்.
- விதையை நன்றாக தண்ணீரில் ஊறவைத்து அரைத்து சுண்டக்காய் அளவு சாப்பிட முறையற்ற மாதவிலக்கு ஒழுங்கு படும். பெரும்பாடு தீரும்.
- 10 கருஞ்செம்பை பூவை நல்லெண்ணையில் சிறிது கஸ்தூரி மஞ்சள் சாம்பிராணி சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் தலையில் வைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்க ( 4 நாட்களுக்கு ஒருமுறை ) தீராத தலைவலி, சன்னி, நீர்க்கோவை, கபாலகுத்து, குடைச்சல், பீனிசம், கழுத்து வலி, தலைபாரம், மண்டையில் நீர் ஏற்றம், கண் நோய்கள் ஆகியவை தீரும்.
- கருஞ்செம்பை இலையுடன் குப்பைமேனி இலை சமனளவு கலந்து உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, படை ஆகியவற்றுக்கு தடவி 2 மணி நேரம் கழித்து குளித்து வர தீரும்.
- இதன் இலைச்சாறு 15மிலி சாப்பிட்டு வர இரத்தம் தூய்மையாகி கரப்பான், மேக்கராகக் கிருமிகள் நீங்கும். சிறுநீர் பெருகும்.
- இதன் இலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி கட்ட ஓடு வாயு கட்டிகள் ஆறும். கட்டிகளுக்கு வைத்து கட்ட கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.
அருமை…மேலும் வளர வாழ்த்துக்கள்….