மூலிகைகள்
பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்
மணத்திற்க்காக சமையலில் சேர்க்கப்படும் பெருங்காயத்தில் பல மருத்துவ நன்மைகள் உள்ளது. இது ஊறுகாய்களிலும் சேர்க்கப்படுகிறது. இப்பொழுது பெருங்காயத்தில் நிறைய தரமற்றவைகள் வருகிறது. நல்ல தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக இருக்கும்.அவற்றை தரம் அறிந்து உபயோகிப்பது நல்லது.
தந்தவேதந்த மூலத் தெழும்பிணி
சருவகாளம் விருச்சிகங் கீடமா
மந்தவாத முதாவர்த்த மல்குநோய்
மார்பணங் கட்டகுன்ம மகோதர
முந்துகர்பத்தின் வித்திரஞ் சூலைச்சூ
ருதிரப்பூச்சி சிலோஷ்மத் துறும்வலி
வந்தமெய்க்கடுப் போடிவை முற்றுமே
மாயுநாறுநற் காயங்கி டைக்கினே
குணம்
மணமுள்ள பெருங்காயத்தினால் வாத நோய், மூல நோய், சகல சர்ப்பவிஷம், தேள்விஷம், கிருமி, வாயு, கபநோய், குடைச்சல் இவைகள் குணமாகும்.
பயன்கள்
- பொரித்த பெருங்காயத்தை வேளைக்கு 1/2 கிராம் பனைவெல்லத்துடன் சேர்த்து கொடுக்க சந்நி, கீல்வாதம், மாதவிலக்கில் உண்டாகும் உதிரச்சிக்கல், வெறிநாய்க்கடி, காக்கைவலி, குடலில் சேர்ந்துள்ள கிருமிகள் முதலியன குணமாகும்.
- பெருங்காயத்தை கோழிமுட்டை மஞ்சள்கருவோடு சேர்த்துண்ண வறட்டிருமல் குணமாகும்.
- பெருங்காயத்தை ஒரு கிராம் அளவு நல்லெண்ணையில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி காதுக்குவிடக் காதுவலி குணமாகும்.
- பெருங்காயம் நரம்புகளின் ஒழுங்கீனத்தால் உண்டாகும் பல ரோகங்களையும் குணப்படுத்தும்.
- பெண்கள் பிரசவித்த பின்னர் வேளைக்கு 1/2 கிராம் வீதம் பனைவெல்லத்தில் வைத்துக் கால் மணிநேரத்திற்கு ஒரு முறையாகக் கொடுத்துக் கொண்டுவர நஞ்சு விரைவில் வெளியாகும்.