கல்லடைப்பு… நீர் கடுப்பு.. நீர் சுறுக்கு போக்கும்… வெள்ளரி
வெள்ளரி காய், பழம், விதை என அனைத்துமே மருத்துவ பயனுடையது. நீர்ச் சத்து நிறைந்த வெள்ளரி தாகத்தை அடக்கும். சிறுநீர் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து வெள்ளரி. வெயில் தாக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு வெள்ளரிக்காய் சிறந்த மருந்தாகும்.
உண்டருந்தத் தீயெழுப்பு முன்மருந்தைத் தான் முடுக்கு
கண்டகரப் பானைக் கடுக்குங்காண் – பண்டிதரே
யுள்ளரிப்பை நீர்க்கடுப்பை யூரைவிடுந் தோட்டிவிடும்
வெள்ளரிக்கா யின் குணத்தை விள்
வெள்ளரிக்காய்
உபயோகிக்கும் முறை
இதன் மேற்தோலை சீவி அரிந்து மிளகும், உப்பும் சேர்ந்துள்ள பொடியில் தொட்டு சாப்பிடலாம்.முதிர்ந்த வெள்ளரிக்காயைப் நறுக்கி கூட்டாக சமைத்து உண்பதுண்டு.
பயன்கள்
வெள்ளரிக்காய் கரப்பான் நீக்கும். உடல் சூட்டை தணிக்கும். தாகத்தை அடக்கும். சிறுநீரை தாராளமாக இறங்க செய்து நீர் சுறுக்கு, நீர் கடுப்பு முதலியவற்றை நீக்கும்.
வெள்ளரிப்பழம்
உபயோகிக்கும் முறை
நல்ல கனிந்துள்ள வெள்ளரிப்பழத்தை மேற்தோலை சீவி வெல்லம் சேர்த்துண்ண நல்ல ருசியாக இருக்கும்.
பயன்கள்
வெள்ளரிப்பழத்தை உண்ண தாகத்தை அடக்கும். நல்ல பசியை உண்டாக்கும்.
வெள்ளரிவித்து
உபயோகிக்கும் முறை
இதிலுள்ள மேல் தோலை நீக்கி உள்ளிருக்கப்பட்ட பருப்பில் ஒரு வேளைக்கு 10 கிராம் அளவு பால் விட்டு அரைத்து மெழுகு பதத்தில் தேவையான அளவு பாலில் கலந்து சிறிது கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட உள் அழலையை ஆற்றுவதுடன், நீர் கடுப்பு, நீர் சுறுக்கு, கல்லடைப்பு, வெட்டை முதலியவை நீங்கும்.
பயன்கள்
வெள்ளரி விதைக்கு கடுகின்ற நீரடைப்பு, நீர் துவார வெடிப்பு, சதையடைப்பு, பிரமேகம், கல்லடைப்பு, வெட்டை இவைகள் நீங்கும்.