மழைக்காலமும் இயற்கை மருத்துவமும்
இருமல், சளி போன்ற சாதாரண நோய்களுக்கு கூட உடனே ஆங்கில மருத்துவத்தை நாடுவது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது. நம் முன்னோர்கள் இது போன்ற சாதாரண நோய்களுக்கு வீட்டிலேயே குணமாக்கும் மூலிகை மருத்துவத்தை அறிந்து வைத்திருந்தார்கள்.
மழைக்காலங்களில் இயற்கை மருத்துவ முறைகளை பின்பற்றினால் மழைக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து எளிதாக நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
தூதுவளை
தூதுவளை சளி, இருமலுக்கு சிறந்த மருந்தாகும். நுரையீரல் சம்பந்தமான நோய்களை போக்குவதில் சிறந்தது தூதுவளை மூலிகை.
- தூதுவளை இலைச்சாறு எடுத்து நெய்யில் காய்ச்சி காலை மாலை என 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மார்பு சளி தீரும்.
- தூதுவளை வேர்,இலை, பூ, காய் என அனைத்தையும் 50 கிராம் அளவு எடுத்து 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மிலியாக காய்ச்சி காலை, மாலை இரு வேளை பருகி வர சுவாச கோளாறு, சளி, இருமல் ஆகியவை தீரும்.
கற்பூரவள்ளி
கற்பூரவள்ளி காசம், நீர்க்கோவை, மார்பு சளி, இருமல் இவைகளை போக்கும்.
- குழந்தைகளுக்கு உண்டான இருமலுக்கு கற்பூரவள்ளி இலை சாறுடன் சிறிது கற்கண்டு கலந்து கொடுக்க இருமல் தீரும்.
- கற்பூரவள்ளி இலைச்சாறுடன் சிறிது தாய்ப்பால் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க சளி, இருமல் ஆகியவை தீரும்.
- வெந்நீரில் கற்பூரவள்ளி இலையை போட்டு குழந்தைகளை குளிப்பாட்ட சளி பிடிக்காமல் இருக்கும்.
சுக்கு
சுக்குகிற்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற நம் முன்னோர்கள் சொல்லுக்கு ஏற்ப சுக்கு ஏராளமான மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. தொண்டை கரகரப்பிற்கு சுக்கு காஃபி சிறந்ததாகும்.மழைக்காலங்களுக்கு இதமாகவும் இருக்கும்.
- சுக்குவுடன் ஏலக்காய், திப்பிலி, அதிமதுரம் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடிக்க இருமல், சளி, காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
துளசி
- அதிகாலை எழுந்தவுடன் 2,3 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
- துளசி இலையை புட்டு அவிப்பது போல் அவித்து பிறகு இலையை சாறுபிழிந்து 20 மிலியளவு பெரியவர்களுக்கும் 5 மில்லியளவு குழந்தைகளுக்கு கொடுத்துவர நெஞ்சில் உள்ள சளியை கரைக்கும்.
மஞ்சள்
- மஞ்சளை நெருப்பில் சுட்டு அதன் புகையை நுகர்ந்து வந்தால் தலைவலி, தலைபாரம், மண்டை நீர், மூக்கடைப்பு ஆகியவை தீரும்.
- தண்ணீரில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து காலை, மாலை பருகி வர வறட்டு இருமல் தீரும்.
திப்பிலி
- திப்பிலி பொடி 1/2 கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவை தீரும்.
- திப்பிலி பொடி 2 கிராம் துளசி பொடி 5 கிராம் ஒன்றாக கலந்து தேனில் குழைத்து சாப்பிட சளி, இருமல் தீரும்.
அதிமதுரம்
2 கிராம் அதிமதுரம் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவை தீரும்.