மூலிகைகள்
புங்கு மருத்துவ பயன்கள்
சிறகமைப்புக் கூட்டிலைகளையும், முட்டை வடிவச் சிற்றிலைகளையும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொறி போன்ற பூக்களையும் நீள் சதுரக் காய்களையும் உடைய மரம். இதன் இலை, வேர், பூ, காய், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
புங்கம் வேர்ப்பட்டைச் சாறு நோய் நீக்கி உடல் தேற்றவும் சதை நரம்புகளை சுருங்கச் செய்யவும் தாதுக்கள் அழுகுவதைத் தடுக்கவும் பயன்படுத்தலாம்.
பயன்கள்
- புங்கம் பூவுடன் நன்னாரி வேர், புளியம் பூ, வெள்ளைப்பூண்டு, வசம்பு, சீரகம், வெட்பாலையரிசி இவற்றை சம அளவு எடுத்து பால்விட்டு அரைத்து நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, 1/2 தேக்கரண்டி அளவு காலையில் மட்டும் கொடுத்து வர பாலகரப்பான் தீரும்.
- புங்கன் வேரை பொடி செய்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி இருவேளை குடித்து வர ஆறாத புண், ரணங்கள் ஆறும்.
- புங்கு இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது கட்டிவர வீக்கம் குறையும்.
- புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சமஅளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு சாப்பிட எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.
- புங்கன் மர இலைகளை இடித்து சாறு எடுத்து 30-60 மில்லி அளவு குடித்து வர வயிற்று புண் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.
- புங்கன் மரப்பட்டையை இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூலநோய் குணமாகும்.
- புங்கமரத்தின் வேரை இடித்து சாறு எடுத்து தடவி வர கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவை விரைவில் குணமாகும்.