மூலிகைகள்
இரைப்பைக்கும் ஈரலுக்கும் பலத்தை கொடுக்கும் சடாமாஞ்சில்
வெப்பத்தன்மையும், காரசுவையும் கொண்ட சடா மாஞ்சில் நல்ல நறுமணம் கொண்டது. இது நல்ல மணம் கொண்டதால் இயற்கை குளியல் பொடி தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது. மேலும் முடி நன்கு வளர இது பயன்படுகிறது.
குட்டஞ் சிலந்திவிடங் கோர புராணசுர
முட்டினங்கால் பேதிகண்ணே யொட்டிருமல்
பித்தமிரைப் பேகும் பெருங்கோரை யென் றுரைக்குஞ்
சுத்தசடா மாஞ்சிதனைச் சொல்
குணம்
சடாமாஞ்சியால் குஷ்டம், சிலந்திவிஷம், நீண்ட நாள் சுரம், உட்சூடு, வாயுபேதி, விழிநோய், காசம், ரத்தபித்தம், சுவாசம் போம் என்க.
பயன்கள்
- சடாமாஞ்சிலை இடித்து சூரணம் செய்து ஒருவேளைக்கு 10 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து கொடுக்க இரைப்பைக்கும் ஈரலுக்கும் பலத்தை கொடுக்கும்.
- சடாமாஞ்சிலை 400 மி.லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 50 மி.லி யாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஒரு வேளைக்கு 1-2 அவுன்ஸ் வீதம் தினம் 2 வேளை கொடுக்க உதிர்ச்சிக்கலை நீக்கும்.
- இதனை கொத்தமல்லி கீரை சாற்றில் உரைத்து வடிகட்டி கண்களில் 1-2 துளி விட கண் சிவப்பு மாறும். பார்வை தெளிவு பெறும். தலையில் தடவ முடி நன்கு வளரும். இது விசேஷமாக காக்கை வலிப்பு, சுவாசகாசம், சூதகசந்தி ஆகியவற்றுக்கும் கொடுக்க படுகிறது.