குழந்தைகளுக்கான மூலிகை கற்பூரவள்ளி
செடி இனம் சேர்ந்தது கற்பூர வள்ளி, வெளிறிய பச்சை நிறம், காரருசி, கற்பூர மணம் உடைய செடி, இது அழகும் மருத்துவ குணங்களும் கொண்டது. இலை கார்ப்புச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. இது குழந்தைகள் மூலிகை எனலாம்.
காச விருமல் கதித்தம சூரிஐயம்
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் – வீசுசுரங்
கற்பாறை யொத்துநெஞ்சிற் கட்டுகபம் வாதமும்போல
கற்பூர வள்ளிதனைக் கண்டு
குணம்
கற்பூரவள்ளியினால் காசம் என்கிற போடி இருமல், அம்மை கொப்பளம், சிலேஷ்மதோஷம், புறநீர்க்கோவை, மார்புசளி, வாதக்கடுப்பு ஆகிய இவைகள் போகும் என்க .
மருத்துவ பயன்கள்
இதன் இலைகளிலிருந்து எடுத்த சாற்றுடன் நல்லெண்ணையும், சர்க்கரையும் கலந்து தலைக்கு தடவினால் ஜலதோஷம் கட்டுப்படும்.
இதன் சாற்றை தண்ணீர் சுண்டுமாறு காய்ச்சி, அரை ஸ்பூன் பெரியவர்களுக்கும் கால் ஸ்பூன் குழந்தைகளுக்கும் உள்ளுக்குள் கொடுத்தால் காச இருமல், வாத கடுப்பு, நெஞ்சிற்க்கட்டு, அம்மை கொப்பளம் போன்றவை குணமாகும்.
கற்பூர வள்ளி இலை சாறும், கற்கண்டும் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு தொல்லை தரும் இருமல் குணமாகும்.
வறட்டு இருமலுக்கு இதன் ரசம் மிகச்சிறந்தது. தினமும் சில கற்பூரவள்ளி இலைகளை சுடுநீரில் போட்டு அந்நீரில் குழந்தையை குளிப்பாட்டி வந்தால் சளி பிடிக்காமல் பாதுகாக்கும்.
கற்பூரவள்ளி சாற்றை 1 டேபிள் ஸ்பூன் அளவு அருந்தி வர நீர்க்கோவை அகலும்.