மூலிகைகள்
சிறுகீரை மருத்துவ பயன்கள்
சிறுகீரை மாற்றடுக்கில் அமைந்த சிறிய இலைகளை கொண்ட சிறிய கீரை இனம். தமிழகமெங்கும் தானே வளரக்கூடியது. பத்தியத்திற்கு ஆகாத கீரை. இலை, வேர் ஆகியவை மருத்துவ குணமுடையது. சிறுகீரை எந்தவித மருந்துகளின் வீரியத்தை குறைத்துவிடும்.
கண்புகைச்ச நேத்திரநோய் காசம் படலரசப்
புண்கிரிச்ச ரஞ்சோபை பொங்குபித்த – மண்பரவு
தாவரவி ஷங்களும்போந் தாழாத் திருவுமுண்டாங்
கூவுசிறு கீரைதனைக் கொள்
குணம்
சிறுகீரையால் தூம்பிரநோய், காசம், படலம், விரணம், வீக்கம், பித்த நோய், நாவிபாஷாணம் முதலிய விஷங்கள் ஆகிய இவைகள் போம். அழகுண்டாகும் என்க
பயன்கள்
- இதனை பருப்புடன் சேர்த்து சமைத்துண்ண நல்ல ருசியாக இருக்கும். இதனால் சிறுநீர் அதிகமாக போகும் தேகத்திலுள்ள நீர்க்கோவை நீங்கும்.
- சிறுகீரை வேர், நெருஞ்சில் வேர், சிறுபூளை வேர், சீரகம் வகைக்கு 40 கிராம் அளவு சிதைத்து 1 லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராக காய்ச்சி 2 பங்காக காலை மாலை குடித்து வர கல்லடைப்பு நீங்கும்.
- சிறுகீரையை சாப்பிட்டுவந்தால் கண்பார்வை திறன் அதிகரிக்கும். மேலும் கண் காசம், கண் படலம், கண் புகைச்சல் ஆகியவை குணமாகும்.
- சிறுகீரை வேரை பச்சரிசி கழுநீர் வண்டலுடன் அரைத்து 10 கிராம் அளவுக்கு தேன் கலந்து கொடுத்து வர இரத்த பித்தம் தீரும்.
- சிறுகீரைச்சாறு, கரிசலாங்கண்ணி சாறு, பால், நல்லெண்ணெய் வகைக்கு 1 லிட்டருடன் எலுமிச்சை சாறு அரைலிட்டர் கலந்து அதில் அதிமதுரம், ஏலம், நெல்லி வற்றல், லவங்கம், கோஷ்டம், வெட்டிவேர், விளாமிச்சை வேர் வகைக்கு 2 கிராம் அரைத்து கலந்து பதமுற காய்ச்சி வடித்து தலை முழுகி வர கண்நோய்கள் வறட்சி முதலியன தீரும். இதுவே சிறுகீரைத் தைலம் எனப்படும்.