மூலிகைகள்
இலுப்பை மருத்துவ பயன்கள்
நீண்ட இலைகளையும், வெள்ளை நிற பூக்களையும், முட்டை வடிவ காய்களையும் உடைய இலுப்பை மரம் தமிழகமெங்கும் காணப்படும். இலுப்பையின் விதை, இலை, பூ, காய், பழம், பிண்ணாக்கு, நெய், மரப்பட்டை என அனைத்தும் மருத்துவ குணமுடையது. இருப்பை, ஓமை என்றும் அழைக்கப்படுவதுண்டு.
குணம்
இலுப்பை பூ உடல் வெப்பத்தை அதிகரிக்கும், பசியை உண்டாக்கும், சதை நரம்புகளை சுருங்கச்செய்யும், காமம் பெருக்கும். விதை நோய்களை நீங்கி, உடலை தேற்றும்.
பயன்கள்
- தாய்ப் பால் சுரைப்பை அதிகரிக்க இலுப்பை இலையை மார்பில் வைத்து கட்டி வர தாய்ப் பால் சுரப்பு மிகும்.
- இலுப்பைப்பூ 50 கிராம் அளவு எடுத்து 400 மிலி தண்ணீர் விட்டு 200மிலி யாக காய்ச்சி வடிகட்டி காலை ஒரு வேளை மட்டும் 45 நாட்கள் சாப்பிட்டு வர மதுமேகம் எனும் நீரிழிவு நோய் குணமாகும்.
- இலுப்பைப்பூ 10 கிராம் எடுத்து 200 மிலி பாலில் போட்டு நன்கு கொதிக்க காய்ச்சி வடிகட்டி குடித்து வர தாது பெருகும், காய்ச்சல் குறையும்.
- இதன் மரப்பட்டையை பச்சையாக எடுத்து சிறிதளவு கசகசா சேர்த்து அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வர சொறி சிரங்குகள் ஆறும்.
- இலுப்பை எண்ணையை இளசூடாக்கி தடவி வெந்நீரில் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி, நரம்பு தளர்ச்சி ஆகியவை தீரும்.
- இலுப்பை பிண்ணாக்கு 20 கிராம் அளவு எடுத்து நீர்விட்டு அரைத்து 100 மிலி நீரில் கலக்கி நஞ்சு உண்டவர்களுக்கு கொடுக்க வாந்தியாகி நச்சு வெளியாகும்.
- இதன் பிண்ணாக்குடன் வேப்பம் பட்டை, பூவரசம்பட்டை சமனளவு நன்றாக கருக்கி அதன் அளவு மஞ்சளும், கார்போக அரிசியும் கலந்து அரைத்து தேங்காய் எண்ணையில் குழப்பி குழந்தைங்களுக்கு உண்டான மண்டை கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவற்றுக்கு தடவ விரைவில் குணமடையும்.
- இலுப்பை பிண்ணாக்கு அரைத்து குழப்பி களியாக கிளறி இளஞ்சூட்டில் விதை வீக்கத்திற்கு கட்டி வர ஒரு வாரங்களில் குணமாகும்.